““ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” - சினிமா விமர்சனம்

ஜி.ராஜசேகர் இயக்கத்தில் இனியா, த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா கோஷ் நடித்துள்ள ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
““ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” - சினிமா விமர்சனம்
Published on

நாயகன் திரிகுண் - நாயகி ஸ்ரீஜித்தா கோஷ் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். இருவரிடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மாறுகிறது. காதலில் இருவருமே எல்லை மீறும்போது, திரிகுண்ணுக்கு ஏற்கனவே 2 பெண்களுடன் பழக்கம் இருப்பது ஸ்ரீஜித்தா கோசுக்கு தெரியவருகிறது. இவனை இப்படியே விட்டுவிட்டால் தவறாகி விடும் என்று எண்ணும் ஸ்ரீஜித்தா கோஷ், திரிகுண்ணை உடனடியாக திருமணம் செய்துகொள்கிறார். பின்னர் காதல் கணவருடன் கோத்தகிரியில் உள்ள தன் வீட்டுக்கு வருகிறார் ஸ்ரீஜித்தா கோஷ். அங்கு ஸ்ரீஜித்தா கோசின் உறவினர்களை திரிகுண்ணை கண்டதும் அதிர்ச்சி அடைந்து போகிறார்கள். அது ஏன்? திரிகுண்ணுக்கும், அந்த குடும்பத்துக்கும் அப்படி என்ன சம்பந்தம்? இறுதியில் என்ன ஆனது? என்பதே “ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” படத்தின் கதை.

இந்த கதையை தேர்வு செய்து நடித்ததற்கே திரிகுண்ணின் தைரியம் தெரிகிறது. முடிந்தவரை முயற்சித்து நடித்துள்ளார். காதலி, மனைவி என இரு பரிமாணங்களில் கலக்கியுள்ளார் ஸ்ரீஜித்தா கோஸ்.

சில ஆண்டுகளுக்கு பிறகு தலைகாட்டியுள்ள இனியாவும், ராதாவும் போட்டிபோட்டுக் கொண்டு நடித்துள்ளனர். கவர்ச்சியையும் வாரி கொட்டியுள்ளனர். ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, தனசேகர், வினோத் ஆகியோரின் காமெடிகளில் 'டபுள் மீனிங்' வசனங்கள் அதிகம் எட்டிப் பார்க்கிறது. விஜயஸ்ரீ ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கின்றன. அருணகிரியின் இசையில் பாடல்கள் ஆட்டம்போட வைக்கிறது. கலர்புல்லான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் இடையேயான எல்லையில் பயணிக்கும் இக்கதையில் விதிமீறல் இருந்தாலும், அதை இலைமறை காய் மறையாக நகைச்சுவையுடன் சொல்லி ரசிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஜி.ராஜசேகர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com