தானா சேர்ந்த கூட்டம்

சி.பி.ஐ. போர்வையில் கருப்பு பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டம். "தானா சேர்ந்த கூட்டம்" படத்தின் சினிமா விமர்சனம்.
தானா சேர்ந்த கூட்டம்
Published on

கதையின் கரு: சி.பி.ஐ. அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கும் தம்பிராமையாவுக்கு தனது மகன் சூர்யாவை சி.பி.ஐ.யிலேயே பெரிய அதிகாரியாக்க ஆசை. சூர்யாவும் அந்த கனவிலேயே வளர்கிறார். சி.பி.ஐ. அதிகாரி சுரேஷ்மேனன் கறுப்பு பண சோதனையில் லஞ்சம் வாங்கி வீட்டில் பதுக்குகிறார். இதுபற்றி மேல் அதிகாரிகளுக்கு புகார் செய்கிறார் தம்பி ராமையா.

இதனால் அவர் மீது கோபத்தில் இருக்கும் சுரேஷ்மேனன் நேர்முக தேர்வில் சூர்யாவுக்கு சி.பி.ஐ.யில் வேலை கிடைக்காமல் தடுத்து விடுகிறார். தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாத விரக்தியில் சூர்யா வருந்துகிறார். அவரது நண்பர் கலையரசன் போலீஸ் வேலைக்கு முயற்சிக்கிறார். அவருக்கு திறமை இருந்தும் லஞ்சம் கொடுக்க முடியாததால் வேலை கிடைக்காமல் போகிறது. அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இதனால் சி.பி.ஐ.க்கு போட்டியாக போலி சி.பி.ஐ. அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்கிறார் சூர்யா. அதில் ரம்யாகிருஷ்ணன், செந்தில், சிவசங்கர், சத்யன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் சேர்கிறார்கள். இந்த குழுவினர் சூர்யா தலைமையில் சுரேஷ் மேனன் பெயரை சொல்லி கருப்பு பணம் வைத்திருப்பவர்களிடம் சோதனை என்று சொல்லி பணம் நகைகளை கொள்ளையடிக்கிறார்கள்.

தங்கள் பெயரில் நடக்கும் இந்த நூதன கொள்ளையை அறிந்து சி.பி.ஐ. அதிர்கிறது. சூர்யா குழுவினரை பிடிக்க கார்த்திக் தலைமையில் அதிகாரிகள் களம் இறங்குகிறார்கள். அவர்களிடம் சூர்யா சிக்கினாரா? கொள்ளையடித்த பணத்தை அவர் என்ன செய்தார்? என்பது கிளைமாக்ஸ். இந்தியில் வந்த ஸ்பெஷல் 26 படத்தின் கருவில் திரைக்கதையை புதிதாக வடிவமைத்து கொடுத்துள்ளனர்.

சூர்யா படம் முழுக்க துறுதுறுவென வருகிறார். சி.பி.ஐ. வேலை கிடைக்காத ஏமாற்றம், நண்பனை இழந்த சோகம், கருப்பு பண வேட்டையில் காட்டும் மிடுக்கு, அதிரடி சண்டையில் வேகம், ஊழல்வாதிகள் மீதான கோபம், கீர்த்தி சுரேசுடன் காதல் என்று அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். சமூக அவலங்களை வசனம் மூலமும் சாடுகிறார்.

கீர்த்தி சுரேஷ் அழகு, அப்பாவித்தனம் மற்றும் காதலில் கவர்கிறார். ஜான்சிராணி சி.பி.ஐ. ஆபீசர் என்று அதட்டும் தோரணையில் வரும் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் அட்டகாசம். பாசமான தந்தையாக வருகிறார் தம்பிராமையா. சி.பி.ஐ. அதிகாரியாக வரும் கார்த்திக் தனது ஸ்டைலில் அசத்துகிறார். இன்னொரு அதிகாரியான சுரேஷ்மேனன் வில்லத்தனத்தில் கவர்கிறார்.

செந்தில், சிவசங்கர், சத்யன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளனர். யோகிபாபு, பிரம்மானந்தம், ஆனந்தராஜ் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள். சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகள் சட்டவிரோத செயலை கண்டுபிடித்தும் கைது செய்ய முடியவில்லை என்பதில் லாஜிக் இல்லை. சில இரட்டை அர்த்த வசனத்தில் ஆபாச நெடி. அதையும் மீறி சமூக அக்கறையுடன் கலகலப்பான படமாக தந்து இருக்கிறார், டைரக்டர் விக்னேஷ் சிவன். அனிருத் இசை, பலம். சொடக்கு மேல சொடக்கு, பீலா பாடல்கள் தாளம்போட வைக்கின்றன. தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் கார்துரத்தல் காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com