தலைநகரம் 2: சினிமா விமர்சனம்

சென்னை மாநகரின் நிகழ்கால ரவுடிகளுக்கிடையேயான அதிகார சண்டையில் ரிட்டையர்டு ரவுடியான `ரைட்டு' நுழைந்தால் என்ன ஆகும் என்பதே 'தலைநகரம் 2' படத்தின் கதை.
தலைநகரம் 2: சினிமா விமர்சனம்
Published on

முன்னாள் ரவுடியான சுந்தர்.சி எந்தவித வம்புக்கும் போகாமல் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இன்னொரு பக்கம் சென்னையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மூன்று ரவுடிகளிடையே போட்டி நிலவுகிறது. ஒரு ரவுடியின் காதலியை இன்னொரு ரவுடி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்கிறான். சுந்தர்.சியின் நலம் விரும்பியான தம்பிராமையாவை வழக்கில் சிக்க வைக்கிறது ரவுடி கும்பல். படத்தின் நாயகிக்கும் ரவுடிகளால் பிரச்சினைகள் வருகிறது.

தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நிம்மதி பறிபோக காரணமாக விளங்கும் ரவுடிகளுக்கு சுந்தர்.சி எப்படி பதிலடி கொடுக்கிறார் என்பது மீதி கதை. சுந்தர்.சிக்கு எதுவெல்லாம் வருமோ அதையெல்லாம் இணைத்து 'ரைட்' கேரக்டரை உருவாக்கிய விதம் அருமை. ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்க்கும் பஞ்ச் டயலாக், சண்டை, சென்டிமென்ட் எமோஷ்னல் என அனைத்து அம்சங்களையும் வழக்கமான பாணியில் வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார் சுந்தர்.சி. அவருடைய மேக்கப் கவனம் பெறுகிறது

டூயட் பாடல்களுக்கு மட்டும் என்று இல்லாமல் நடிக்கவும் செய்துள்ளார் பாலக் லால்வாணி. அவருடைய கவர்ச்சியானது படத்தை வண்ண மயமாக நகர்த்த உதவியிருக்கிறது.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாக மாறும் தன்மைக் கொண்ட தம்பி ராமையா இதிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். தம்பிராமையாவின் மகளாக வரும் ஆயிராவுக்கு நல்ல வாய்ப்பு. அவர் தன்னுடைய கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். 'பாகுபலி' பிரபாகரன், ஜோஸ், விஷால் ஆகிய மூன்று பேருக்கும் உரத்த சத்தம் எழுப்பும் வில்லன் வேடம்.

வன்முறை தூக்கலாக இருப்பதும், அதிக லாஜிக் மீறல்களும் நெருடல். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. படத்தின் சிறப்பு அம்சமான சண்டைக்காட்சிகளை மிரட்டலாக படமாக்கியுள்ளனர். ஜிப்ரானின் பின்னணி இசை கதைக்கு மாஸ் சேர்க்கிறது. சண்டை படமாக இருந்தாலும் சில இடங்களில் மெல்லிசையால் அசத்தியுள்ளார். வழக்கமான கேங்ஸ்டர் படத்தை முடிந்தளவுக்கு யதார்த்தமாக சொல்லி கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் வி.இசட். துரை. அளவான பில்டப் வசனங்கள், சுந்தர்.சி யின் மனதில் இருக்கும் சோகம், என அனைத்து அம்சங்களையும் அடிதடிக்கு மத்தியில் அழகாக கடத்தி இருப்பது இயக்குனரின் வெற்றி.

கதையின் முடிவு யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை அதை மறக்க செய்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com