

சென்னை,
கணவரை இழந்த துப்புரவு தொழிலாளியான அபர்ணதி, தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து வக்கீலாக்க வேண்டும் என்று துடிக்கிறார். 'செஸ்' விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் அவரது மகன் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால் தனது தாயின் வேலையை சுட்டிக்காட்டி பல இடங்களில் அவர் புறக்கணிக்கப்படுகிறார். மகனின் ஆசையை அறிந்துக் கொள்ளும் அபர்ணதி, நிராகரிக்கப்பட்ட தன் மகனுக்கு தானே 'செஸ்' விளையாட்டை சொல்லிக்கொடுத்து, புறக்கணித்தவர்கள் முன்பு தலைநிமிர செய்ய துடிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? துப்புரவு தொழிலாளியான அபர்ணதிக்கும் 'செஸ்' விளையாட்டுக்கும் என்ன தொடர்பு? என்பதே மீதி கதை.
விளையாட்டு என்பது திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று பொதுவாக நம்பப்பட்டாலும், வரலாற்று ரீதியாகவும் தற்போதும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வீரர்கள் பல தடைகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டு வருகின்றனர், என்பதை கற்பனையாக மட்டும் இன்றி, தான் பார்த்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் வெற்றி செழியன், பள்ளி முதல் பொது விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சிக் கூடங்களை அணுகுவதில் தற்போது சாதிய ரீதியான கட்டுப்பாடுகளும், பாகுபாடுகளும் எப்படி மறைமுகமாக இயங்குகின்றன என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி அசத்தியுள்ளார். அவரது எதார்த்தமான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. அவரது பின்னணி ஆச்சரியம். அபர்ணதியின் கணவராக நடிக்கும் லிங்கேஷுக்கும் இதுபோன்ற கதாபாத்திரம் புதிதல்ல என்பதால், பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன், அபர்ணதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் அஸ்வின், தமிழரசி, அன்பு என அனைவருமே பொருத்தமான தேர்வு. ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன் ஆர்.எஸ். தங்கள் பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். காட்சிகளை ரசிக்க முடிகிறது. தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் படத்துடன் ஒன்ற வைக்கிறது,
உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை படத்துக்கு பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது. சாதி பாகுபாடு இல்லாத துறை என்று சொல்லக்கூடிய விளையாட்டுத் துறையில் இருக்கும் உள்ளடி அரசியலை சமரசம் இல்லாமல் சொல்லி, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் வெற்றி செழியன். தரமான படைப்புக்காக பாராட்டலாம்.