கதைநாயகன் விக்ரமை கொல்ல துடிக்கும் கொலைகார கும்பல் படம் "கடாரம் கொண்டான் " - சினிமா விமர்சனம்

கதாநாயகன் விக்ரம் யார், அவரை கடத்தி வர சொன்னவர் யார், அபிஹசனும், அவர் மனைவியும் என்ன ஆகிறார்கள். படம் கடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்.
கதைநாயகன் விக்ரமை கொல்ல துடிக்கும் கொலைகார கும்பல் படம் "கடாரம் கொண்டான் " - சினிமா விமர்சனம்
Published on

கதையின் கரு: மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள படம். ஒரு மிகப்பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து ரத்த காயத்துடன் தப்பி ஓடுகிறார், விக்ரம். அவரை ஒரு கும்பல் துரத்துகிறது. அப்போது விக்ரம் விபத்தில் சிக்குகிறார். நினைவிழந்த நிலையில், அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.

அதே ஆஸ்பத்திரியில் டாக்டராக இருக்கிறார், அபிஹசன் (நடிகர் நாசரின் மகன்) அவருடைய மனைவி அக்ஷராஹாசன் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். விக்ரமை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அபிஹசனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருடைய கவனத்தை மீறி ஒரு ஆசாமி, விக்ரமை கொல்ல முயற்சிக்கிறான். அந்த கொலை முயற்சியில் இருந்து விக்ரமை, அபிஹசன் காப்பாற்றுகிறார்.

இந்த நிலையில், அபிஹசனுக்கு ஒரு போன் வருகிறது. விக்ரமை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்... மறுத்தால், உன் கர்ப்பிணி மனைவி கொலை செய்யப்படுவாள் என்று யாரோ ஒருவன் போனில் மிரட்டுகிறான். பயந்து போன அபிஹசன் அதற்கு சம்மதிக்கிறார். ஆஸ்பத்திரியில் இருந்து விக்ரமை வெளியே கொண்டு வந்து துப்பாக்கி முனையில் அவரை எதிரிகளின் இருப்பிடத்துக்கு கொண்டு செல்கிறார். அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

விக்ரம் யார், அவரை கடத்தி வர சொன்னவர் யார், அபிஹசனும், அவர் மனைவியும் என்ன ஆகிறார்கள்? என்பது மீதி கதை.

படத்துக்கு படம் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் விக்ரம், இந்த படத்தில் நரைத்த தாடி-மீசை சகிதம் பாதி மார்பிலும், முதுகிலும் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். அதிகம் பேசாமல் நடிப்பிலும், சண்டை காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். அவர் ரத்த காயத்துடன் அடுக்கு மாடிகளில் தாவி குதித்து தப்பி ஓடும் ஆரம்ப காட்சி, ஒரு உதாரணம். சண்டை காட்சிகளில், ஹாலிவுட் நாயகர்களுக்கு சரியான சவால்.

நாசரின் மகன் அபிஹசன், அழகான நாயகன். மென்மையான காதல் நாயகன் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அக்ஷராஹாசனுக்கு கர்ப்பிணி கதாபாத்திரம். அந்த கொலைகார கும்பலிடம் சிக்கி இவர் போராடுகிற காட்சியில், அய்யோ பாவம் என்று அனுதாபங்களை அள்ளுகிறார். படத்தில், முகம் தெரியாத புதுமுகங்கள் நிறைய.

படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு ஒளிப்பதிவாளர் சீனிவாஸ் குதா, மலேசிய அழகை எல்லாம் அள்ளி வந்து இருக்கிறார். கார் துரத்தல் காட்சிகளில், படம் பார்ப்பவர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார். பின்னணி இசை மூலம் படத்துக்கு வேகம் சேர்க்கிறார், இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஹாலிவுட் ஸ்டைலில் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் ராஜேஷ் எம்.செல்வா. யார் போலீஸ், யார் திருடன்? என்று குழம்புகிற அளவுக்கு எல்லோரும் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். படத்தின் மிக சிறந்த அம்சம், விக்ரம் நடிப்பும், சண்டை காட்சிகளும்...

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com