கடத்தல் உலகின் மறுபக்கம்... ‘எனிமி ஆப் தி ஸ்மக்லர்’ பட விமர்சனம்

கடத்தல் உலகின் மறுபக்கம்... ‘எனிமி ஆப் தி ஸ்மக்லர்’ பட விமர்சனம்

சமயமுரளி இயக்கிய ‘எனிமி ஆப் தி ஸ்மக்லர்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
Published on: 
Cinema Review(3.5 / 5)

சென்னை,

சுங்கத்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள டி.சமயமுரளி, தனது பணிக்காலத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள் அடிப்படையில் இயக்கி, தயாரித்திருக்கும் படம்.

நண்பர்களான சரணும், பால சரவணனும் குறுகிய காலத்திலேயே நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் ஜே.டி.சக்கரவர்த்தியிடம் வேலைக்கு சேர்கிறார்கள். தங்களது திறமையால் சக்கரவர்த்தியிடம் பாராட்டையும் பெறுகிறார்கள்.

இதற்கிடையில் துபாயில் இருக்கும் மிகப்பெரிய தாதாவான லால், ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை ஆந்திரா துறைமுகத்துக்கு அனுப்புகிறார். அதை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் வெளியே கொண்டுவருமாறு சக்கரவர்த்தியிடம், லால் கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து அந்த பொறுப்பை சரண், பாலசரவணனிடம் நம்பி ஒப்படைக்கிறார் சக்கரவர்த்தி. இந்த கடத்தலை தடுத்து நிறுத்த சுங்கத்துறை அதிகாரி சமய முரளி களமிறங்குகிறார். கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார். அதன்பிறகு என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.

சரண் வழக்கம்போல துடிப்பான நடிப்பை காட்டி கலக்கிவிட்டார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கிறது. பாலசரவணனிடம் வழக்கமான காமெடிகள் இல்லாவிட்டாலும், கொஞ்சம் சீரியசான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். கார்ப்பரேட் வில்லன்களாக லாலும், சக்கரவர்த்தியும் கலக்கிவிட்டனர்.

சுங்க அதிகாரியாக வரும் சமயமுரளி, மிடுக்கான நடிப்பால் ஆச்சரியம் தருகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார். ராதிகா சரத்குமாரின் அனுபவ நடிப்பும், ஸ்மேகா, ஜாபர் சாதிக், காளிவெங்கட் உள்ளிட்டோரின் பொறுப்பான நடிப்பும் கவனிக்க வைக்கிறது. ஒரு பாடலுக்கு கிளுகிளுப்பூட்டும் நடனத்தை தந்துள்ளார், சினேகா குப்தா. கவின் பாஸ்கர் ஒளிப்பதிவும், சாம் டேனியல் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். இன்னும் புதுமையான காட்சிகள் இருந்திருக்கலாம். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை கூண்டோடு பிடித்து வரும் இக்காலத்தில், மனைவியை பிடித்துவைத்து கணவனுக்கு போலீசார் வலைவிரிப்பது நியாயமா?

கடல்வழி கடத்தல் சார்ந்த பல புதிய தகவல்களுடன், சுங்கத்துறை சார்ந்த தெரியாத பல விஷயங்களையும் நமக்கு சொல்லி, படம் முழுக்க பரபரப்புடன் இருக்கச்செய்து, நடிப்பு தாண்டி இயக்கத்திலும் கவனம் ஈர்த்திருக்கிறார் சமயமுரளி.

எனிமி ஆப் தி ஸ்மக்லர் - நரிவேட்டை.

X