உண்மை சம்பவம்- ‘குருப்’ சினிமா விமர்சனம்

கேரளாவில் சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து குரூப் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
உண்மை சம்பவம்- ‘குருப்’ சினிமா விமர்சனம்
Published on

வாழ்க்கையில் வேலை வெட்டி இல்லாத ஒருவன் குறுக்கு வழியில் முன்னேற தன்னையே இறந்துபோனதாக பொய் சொல்லி, ஊர் உலகத்தை நம்பவைக்கிறான். போலீஸ் சந்தேகிக்கிறது. அவனை பிடிக்க வலை விரிக்கிறது. இதற்காக அவன் பெயரையும், தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு ஊர் ஊராக தப்பி செல்கிறான்.

அவன் பிடிபட்டானா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி. வித்தியாசமான கதை. கதாநாயகனாகவும் இல்லாமல், வில்லனாகவும் இல்லாமல், எதிர்மறையான கதாபாத்திரம் ஏற்று துணிச்சலாக நடித்து இருக்கிறார், துல்கர் சல்மான். ஒரு மாதிரியான சிகையலங்காரம், எப்போதும் சிரித்த முகம், அடிக்கடி சிகரெட் பிடிக்கும் சுபாவம் கொண்டவராக வீடு கட்டி விளையாடி இருக்கிறார், துல்கர் சல்மான்.

1984 முதல் கேரள போலீஸாரால் தேடப்பட்டு வரும் சுகுமாரா குருப் என்பவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

கோபி கிருஷ்ணா, சுதாகர் குருப் என அவர் ஊருக்கு ஒரு பெயர் சூட்டிக்கொண்டு தன் சுய உருவத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டு தப்பி செல்லும் பலே ஆசாமியாக ஆச்சரியப்படுத்துகிறார். அவருக்கு ஜோடியாக சோபிதா ஆழமான கண்களும், பெரிய உதடுகளுமாக (அழகான ராட்சசியாக) ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கிறார்.

பரத் மிக சின்ன பாத்திரத்தில் வந்து போகிறார். போலீஸ் அதிகாரியாக இந்திரஜித் சுகுமாரன், பீட்டராக சன்னி வய்னா ஆகிய இருவரும் மனம் கவர்கிறார்கள்.

நிமிஸ் ரவியின் ஒளிப்பதிவு, படத்தின் இன்னொரு நாயகன். சுசின் சியாமின் பின்னணி இசை, கூடுதல் அம்சம். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியிருக்கி றார். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில், நீளம் அதிகம். மொத்தத்தில், மலையாள சினிமாவுக்கே உரிய மாறுபட்ட படைப்பு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com