“வடம்” திரைப்பட விமர்சனம்

இயக்குனர் வி.கேந்திரன் இயக்கிய “வடம்” படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

“வடம்” திரைப்பட விமர்சனம்
Published on

ஊரில் முக்கிய புள்ளியான நரேன், அடிமாட்டுக்கு செல்லும் மாடுகளை காப்பாற்றி தனது கோசாலையில் பராமரிக்கிறார். அதில் உடல் குறைபாடு கொண்ட ஒரு கன்று குட்டி மீது, நரேனின் மகனான விமல் பாசம் காட்டுகிறார். அதற்கு பயிற்சியளித்து வீரமிக்க காளையாக மாற்றி, மஞ்சு விரட்டு போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறார். ஒருபக்கம் காளையால் கிடைக்கும் புகழ். இன்னொரு புறம் சனாஷ்காவுடனான காதல் என விமலின் வாழ்க்கை ஜாலியாக செல்கிறது.

இதற்கிடையில் திடீரென அந்த காளைக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அதேவேளை விமலும் ஒரு கொலைப்பழியில் சிக்கி சிறை செல்கிறார். விமலை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சிக்கிறது. விமலின் நம்பிக்கைக்குரியவர்களும் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள். அப்படி என்னதான் நடந்தது? விமலை கொலை செய்ய துடிப்பது யார்? விமல் இந்த சிக்கலில் இருந்து மீண்டாரா, இல்லையா? என்பதே பரபரப்பான மீதி கதை.

கிராமத்து கதாபாத்திரம் என்றாலே அத்துப்படி என்பதால். விமல் பெரியளவில் மெனக்கெடவில்லை. அடங்காத காளையின் உரிமையாளராக 'பந்தா'வாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை காட்டிலும் தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார். அழகாலும், நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார் சனாஷ்காஸ்ரீ. பிற்பாதியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் மிரட்டல். நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த், நரேன், இந்துமதி, தீபா சங்கர், பால சரவணன், மதுசூதனன் ராவ் என அத்தனை பேரும் கலக்கல்.

பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவில் மஞ்சு விரட்டு காட்சிகள் சிலிர்ப்பூட்டுகிறது. இமானின் இசை ஆட்டம் போட வைக்கிறது. இன்னும் புதுமை இருந்திருக்கலாம். பரபரப்பான காட் சிகள் படத்துக்கு பலம். மஞ்சு விரட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் கண்களுக்கு விருந்தளித்தாலும், விதிமுறைகள் பற்றி சரியாக தெளிவுபடுத்தவில்லை. தொடர்பில்லாத பல காட்சிகள் யோசிக்க வைக்கின்றன. இங்கு யாருக்கு. யாருடன் மோதல்? என்பதை சுத்தவிடாமல் சொல்லி இருக்கலாம்.

சாதாரண கமர்ஷியல் கதையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் கலந்து ரசிக்க வைத்திருக்கும் இயக்குனர் வி.கேந்திரன், திரைக்கதையில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். வடம் இன்னும் நெருக்கமாக கோர்க்க வேண்டிய பூச்'சரம்' .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com