வாத்தி: சினிமா விமர்சனம்

வாத்தி: சினிமா விமர்சனம்
Published on

கதை 1990-களில் நடக்கிறது. கல்வித்துறையில் தனியார் ஆதிக்கம் மேலோங்குகிறது. தனியார் பள்ளிகள் அமைப்பின் தலைவராக இருக்கும் சமுத்திரக்கனி மாணவர்களிடம் கட்டணக்கொள்ளை நடத்துகிறார். அதற்கு 'செக்' வைக்க அரசு சட்டம் கொண்டுவர முயற்சிப்பதை முன்கூட்டியே அறிந்து அதைத்தடுக்க அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து தரம் உயர்த்தித்தருவதாக சொல்லி தனியார் பள்ளிகளில் உள்ள திறமையற்ற ஆசிரியர்களை அரசுப்பள்ளிகளுக்கு பாடம் நடத்த அனுப்பி வைக்கிறார். அந்தக்குழுவில் கணக்கு ஆசிரியர் தனுசும் இருக்கிறார்.

சென்னை, ஆந்திரா எல்லையில் இருக்கும் சோழவரம் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு பாடம் நடத்த வரும் தனுஷ் அந்தப்பள்ளியின் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்கு செல்வதை பார்த்து அதிர்கிறார். அவர்களை கஷ்டப்பட்டு அழைத்து வந்து பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வைக்கிறார்.

இதனால் தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் குறைந்து விடும் என்று அச்சப்படும் சமுத்திரக்கனி அடியாட்களை அனுப்பி தனுசுக்கு தொல்லை கொடுக்கிறார். தனுஷ் வேலை பறிபோகிறது. மாணவர்கள் படிப்பும் நின்றுபோகிறது. அவர்களின் படிப்பைத்தொடர வைத்து கலெக்டர், டாக்டர், என்ஜினீயர் என்று உயர் பதவிகளுக்கு கொண்டு வர தனுஷ் முயற்சிக்கிறார். அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா? இல்லையா? என்பதை ஜனரஞ்சமாக சொல்கிறது மீதி படம்.

ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான முதுகெலும்பு கதாபாத்திரம் தனுசுக்கு. அதற்கு தனது இயல்பான நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார். நெகிழவைக்க வேண்டிய இடத்தில் நெகிழவைக்கிறார். மாஸ் காட்ட வேண்டிய இடத்தில் அதிரடி செய்கிறார். மொத்தத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் நடை, உடை, பாவனையால் நல்லாசிரியராய் மின்னுகிறார்.

சம்யுக்தாவுக்கு காட்சிகள் குறைவு. ஆனால், பாடல் காட்சிகளில் ஸ்கோர் செய்துவிடுகிறார். செல்வந்தர் கேரக்டருக்கு சரியாக பொருந்துகிறார் சமுத்திரக்கனி. கோட், சூட் என கெட்டப் கலக்கலாக இருக்கிறது. வில்லத்தனத்தில் அசரடிக்கிறார். நான் கடவுள்' ராஜேந்திரன் அளவாக சிரிக்க வைக்கிறார். கென் கருணாஸ், சாய்குமார், ஆடுகளம் நரேன், இளவரசு ஆகியோர் கதாபாத்திரங்கள் உணர்ந்து நடித்துள்ளனர். பாரதிராஜா ஒரு காட்சியில் வந்து போகிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் 'வா வாத்தி' பாடல் மீண்டும், மீண்டும் கேட்க தூண்டுகிறது. பின்னணி இசையும் கதைக்கு வலு சேர்த்துள்ளது. யுவராஜின் ஒளிப்பதிவு, குறைகள் இல்லாமல் படத்திற்குத் தேவையானதை செய்திருக்கிறது.

பார்த்து பழகிய காட்சிகள், தெலுங்கு வாடை படத்தின் பலகீனமாக உள்ளது.

கல்வியின் சிறப்பையும், கல்வி கற்பதால் வாழ்க்கை தரம் எப்படி உயர்வடையும் என்பதையும் சமூக அக்கறையோடு உணர்வுப்பூர்வமாக சொல்லவேண்டும் என்ற முயற்சியில் இயக்குனர் வெங்கி அட்லூரி வென்று இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com