வெப்: சினிமா விமர்சனம்

வெப்: சினிமா விமர்சனம்
Published on

ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஷில்பா மஞ்சுநாத், சுபபிரியா மலர், சாஷ்வி பாலா ஆகிய மூவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் மது, புகை, போதை வஸ்துகள் என்று கும்மாளம் போடுகின்றனர். இதனால் குடும்பத்தினர் கவலையில் இருக்கிறார்கள். ஒரு நாள் கேளிக்கை விடுதியில் தோழியின் திருமண விருந்தில் நிதானம் இழக்கும் அளவுக்கு குடித்து காரில் புறப்படுகின்றனர்.

நடுவழியில் ஷில்பா மஞ்சுநாத்தையும் அவருடைய தோழிகளையும் நட்ராஜ் கடத்தி பாழடைந்த வீட்டில் சிறை வைக்கிறார். அங்கு தோழிகள் தொல்லைக்கு ஆளாகின்றனர். அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள்? கடத்திய நட்ராஜ் யார்? போன்ற கேள்விகளுக்கு விடையாக மீதி கதை.

நட்ராஜுக்கு ஹீரோ, வில்லன் என இரண்டு மாறுபட்ட குணங்களை கொண்ட வேடம். அதை அவரும் மிக அழகாக கையாண்டு இருக்கிறார். மாடர்ன் வேடத்தில் நாயகியை மிரட்டுவது, வேட்டி, சட்டையில் தங்கையிடம் பாச மழை பொழிவது என நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் நவநாகரிக பெண் வேடத்துக்கு கச்சிதமாக இருக்கிறார். கை நிறைய சம்பளம் வாங்கும் பெண்களின் மனநிலையையும், அணுகு முறையையும் சர்வ சாதாரணமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஓரிரு காட்சியில் வந்தாலும் நான் கடவுள் ராஜேந்திரன் சிரிக்க வைக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார்.

துணை வேடங்களில் வரும் அனன்யா மணி, சாஷ்வி பாலா, முரளி, சுபபிரியா மலர் உள்பட அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பெரும்பகுதி கதை அறைக்குள்ளேயே நகர்வது பலகீனம்.

திரில்லர் கதைக்கு பின்னணி இசைதான் முதுகெலும்பு என்பதை கருத்தில் கொண்டு மிக அதிகமாக உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.

பாழடைந்த பங்களாவுக்குள் கதை நடந்தாலும் சலிப்பு தட்டாத வகையில் வித்தியாசமான கேமரா கோணங்களில் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப்.

மது, புகை போன்ற போதை வஸ்துகள் இளம் பெண்களின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை சமூக கண்ணோட்டத்தோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆரூண். கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com