ஓ.டி.டி.யில் வெளியாகும் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரைப்படம்

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தின் ஓ.டி.டி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.
இத்திரைப்படம் வெளியான 32 நாட்களில் ரூ. 1831 கோடியை வசூல் செய்தது. இப்படம் 1900 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள இத்திரைப்படம் 50வது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.
தற்பொழுது 'புஷ்பா 2' படத்தின் ஓடிடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் 'புஷ்பா 2' ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் வரும் ஜனவரி 30 ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.