

சோனாக்சி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள படம்‘சிஸ்டம்’ . இதில் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் மே 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தற்போது இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இப்படம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாகும். இதில் சோனாக்சி சின்ஹா வசதி படைத்த மற்றும் செல்வாக்கு மிக்க அரசு வழக்கறிஞராக நடித்துள்ளார். ஜோதிகா எளிய பின்னணியில் இருந்து வந்த நீதிமன்ற சுருக்கெழுத்தாளராக நடித்துள்ளார். சமூக அந்தஸ்தில் முற்றிலும் வேறுபட்ட இந்த இரு பெண்களும், புதைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எப்படி கைகோர்க்கிறார்கள்? அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கு இடையே அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. இரு வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படம் பற்றி இயக்குநரும் இணை எழுத்தாளருமான அஸ்வினி திவாரி கூறுகையில் “நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன. ‘சிஸ்டம்’ திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாக்சி சின்ஹா கூறுகையில் “இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். ‘சிஸ்டம்’ போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை பிரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாதாரண நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்றார்.
சரிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா கூறுகையில் “பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது சவாலானது, அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவை இந்த படம் பேசுகிறது. அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார்.” என்றார்.