

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில், ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இயக்கிய ‘மீசைய முறுக்கு 2’ படம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி வெளியானது. இந்த படத்தில் கெட்டிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஜே. ஆச்சார், நாசர், ஹர்ஷத் கான், பாபா பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கானா பாடல்களையும், கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து ‘மீசைய முறுக்கு 2’ படம் உருவானது.
இப்படம் உலகளவில் ரூ.55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.