

குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் திகில் திரைப்படமான ‘ஆப்செஷன்’ படத்தின் ஒரிஜினல் அன்கட் வெர்ஷன், வரும் அக்டோபர் 30-ந் தேதி இந்தியாவில் ஓடிடியில் வெளியாகிறது.
கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை கர்ரி பார்க்கர் இயக்கியுள்ளார். மைக்கேல் ஜான்ஸ்டன், இன்டே நவர்ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த மே 15-ந் தேதியும், இந்தியாவில் மே 29-ந் தேதியும் இப்படம் வெளியானது. குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட கர்ரி பார்க்கர், இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளார்.
இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரியும் பேர் என்ற இளைஞர், தனது சக ஊழியரான நிக்கியைக் காதலிக்கிறார். ஆனால், தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார். இந்தச் சூழலில், விருப்பங்களை நிறைவேற்றும் அதிசய சக்தி கொண்ட ஒரு பொம்மை அவருக்குக் கிடைக்கிறது. அந்தப் பொம்மையிடம், நிக்கி தன்னைக் காதலிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவிக்கிறார். அவரது ஆசை நிறைவேறியதும், எதிர்பாராத திகிலூட்டும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழத் தொடங்குகின்றன. காதல் ஆசை விபரீதமாக மாறுவதையும், அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் ‘ஆப்செஷன்’ திரைப்படம், உலகம் முழுவதும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட திகில் படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற இப்படம், எதிர்பாராத வெற்றிப் படமாகவும் அமைந்தது. இதன் மூலம் இயக்குநர் கர்ரி பார்க்கருக்கும் சர்வதேச அளவில் கவனம் கிடைத்தது.
இந்நிலையில், ‘ஆப்செஷன்’ படத்தின் ஒரிஜினல் அன்கட் வெர்ஷன், அக்டோபர் 30-ந் தேதி இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் வெளியான பதிப்பில் இடம்பெறாத கூடுதல் காட்சிகளுடன் இந்தப் பதிப்பு வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே படத்தைப் பார்த்த ரசிகர்களும், முதன்முறையாகப் பார்க்க விரும்புபவர்களும் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.