‘திரிஷ்யம் 3' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 3' படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
திரிஷ்யம் 3
Published on

மலையாள திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படங்களுள் ஒன்றாக கருதப்படும் திரிஷ்யம் திரைப்படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மோகன்லால் மற்றும் மீனா நடித்த இந்த படம் 2013-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடரும் ‘திரிஷ்யம்’ வெற்றிப்பயணம்

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் 2 திரைப்படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியான அந்த படம் விமர்சன ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் வெற்றி கண்டது. இதையடுத்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திரிஷ்யம் 3 திரைப்படம் உருவாக்கப்பட்டது.

ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே வரவேற்பை பெற்ற இந்த படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிக வசூல் ஈட்டிய மலையாள படம்

திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வரும் ‘திரிஷ்யம் 3’, இந்த ஆண்டில் இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாகவும் இது சாதனை படைத்துள்ளது.

ஓடிடி ரிலீஸ்...

இந்த நிலையில், திரிஷ்யம் 3 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் 18-ம் தேதி வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com