ஓடிடியில் வெளியாகும் ஊர்வசியின் ‘ஆஷா’ திரைப்படம் - எப்போது, எங்கு பார்க்கலாம்?

நடிகை ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் ‘ஆஷா’ ஓடிடியில் வெளியாக உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் ஊர்வசியின் ‘ஆஷா’ திரைப்படம் - எப்போது, எங்கு பார்க்கலாம்?
Published on: 

சபர் சனல் இயக்கத்தில் நடிகை ஊர்வசி நடிப்பில் வெளியான ‘ஆஷா’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தமிழில் பாக்யராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஊர்வசி. 1980, 90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ஊர்வசி, தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

திரையரங்குகளில் வெளியான ‘ஆஷா’

ஊர்வசி நடிப்பில் அண்மையில் வெளியான மலையாளத் திரைப்படம் ‘ஆஷா’. சபர் சனல் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உளவியல் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

என்ன கதை?

கணவரை இழந்த ஆஷா, தனது மகள் அனகாவுடன் வசித்து வருகிறார். தனிப்பட்ட துயரங்கள் மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படும் அவர், அதிகக் கோபமும் சந்தேகமும் கொண்டவராக மாறுகிறார். இந்நிலையில், சிறிய சாலை விபத்தைத் தொடர்ந்து ஜீமோன் என்பவருடன் அவருக்கு மோதல் ஏற்படுகிறது.

தனது மகளுக்கு நேர்ந்த விபத்துக்குப் பின்னால் ஜீமோன் இருப்பதாக ஆஷா சந்தேகிக்கிறார். இதனால் அவரைக் கடத்தி, கட்டுமானப் பணிகள் நடைபெறும் தனது வீட்டில் அடைத்து வைக்கிறார். அதன்பிறகு நிகழும் எதிர்பாராத சம்பவங்களே படத்தின் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன.

5 மொழிகளில் ஓடிடி வெளியீடு

திரையரங்குகளில் வெளியான ‘ஆஷா’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படத்தைப் பார்க்கலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com