ஓ.டி.டியில் வெளியானது 'விஜய் 69'

நடிகர் அனுபம் கெர் நடித்துள்ள 'விஜய் 69' ஓ.டி.டியில் வெளியாகியுள்ளது.
அனுபம் கெர் பிரபல இந்தி நடிகர் ஆவார். தமிழில் வி.ஐ.பி., லிட்டில் ஜான், குற்றப்பத்திரிகை ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
'விஜய் 69' படத்தை அக்சய் ராய் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை மணீஷ் ஷர்மா தயாரித்துள்ளார். அனுபம் கெர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சங்கி பாண்டே, மிஹிர் அஹூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டியில் வெளியானது.
69-வயதான விஜய் என்பவர் சைக்கிளிங் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கனவுகளை அடைய வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.
படம் குறித்து அனுபம் கெர் கூறுகையில், "இது ஒரு படம் என்பதையும்தாண்டி பேரார்வம், விடாமுயற்சி, அசைக்கமுடியாத நம்பிக்கையை பேசுகிறது. கனவுகளை அடைய வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும். வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் புதிய தொடக்கத்துக்கான வாய்ப்பை வழங்குகிறது" என்றார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக அசத்தி வரும் அனுபம் கெர் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கங்கனா ரணாவத் இயக்கியுள்ள 'எமர்ஜென்சி' படத்திலும் இவர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






