நடந்து செல்பவர்களை ஏமாற்றி, பணம் பறிக்கிறார்கள்: படம் "ஜாக்பாட்" - விமர்சனம்

கதாநாயகன் இல்லாத கதாநாயகி படம். கதாநாயகி, ஜோதிகா. அவருடன் வரும் துணை கதாநாயகி, ரேவதி. இருவரும் சின்ன சின்னதாக திருடி பிழைக்கிறார்கள். ஜாக்பாட் படத்தின் விமர்சனம்.
Published on

பொது இடங்களில் நடந்து செல்பவர்களை ஏமாற்றி, பணம் பறிக்கிறார்கள். இப்படி ஒரு குற்றத்தில் மாட்டுகிற அவர்கள் இருவரும் ஜெயிலுக்கு போகிறார்கள்.

அங்கே வயதான பாட்டி சச்சுவை சந்திக்கிறார்கள். சச்சுவை ஜெயில் பெண் வார்டன் அடித்து உதைத்துக் கொண்டிருக்கும்போது, அவரிடம் இருந்து ஜோதிகா குறுக்கே பாய்ந்து காப்பாற்றுகிறார். அப்போது சச்சு ஒரு புதையல் பற்றிய ரகசியத்தை வெளியிடுகிறார். ரவுடிகளை வைத்து தாதா தொழில் நடத்தும் ஆனந்தராஜ் வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில், ஒரு அபூர்வ அட்சய பாத்திரத்தை புதைத்து வைத்து இருக்கிறேன் என்று சச்சு சொல்கிறார்.

அந்த அட்சய பாத்திரத்தை கைப்பற்ற ஜோதிகாவும், ரேவதியும் டாக்டர்கள் போல் நடித்து ஆனந்தராஜின் வீட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்களை ஆனந்தராஜ் பார்த்து விடுகிறார். இந்த இரண்டு பேரையும் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று ஆனந்தராஜ் யோசித்து பார்க்கிறார். ஜோதிகா-ரேவதி இருவரும் அவரை ஏற்கனவே ஏமாற்றியவர்கள் என்பது நினைவுக்கு வர- இருவரையும் பிடித்து இன்னொரு தாதாவான மன்சூர் அலிகான் பாதுகாப்பில், சிறை வைக்கிறார்.

அங்கிருந்து ஜோதிகாவும், ரேவதியும் தப்பினார்களா, இல்லையா? அட்சய பாத்திரத்தை இருவரும் கைப்பற்றினார்களா, இல்லையா? என்பது மீதி கதை. ராட்சசி படத்தில் நேர்மையான தலைமை ஆசிரியையாக வாழ்ந்து காட்டிய ஜோதிகாவுக்கு, இது முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். ஜோடி இல்லாமல் ரேவதியுடன் சேர்ந்து ஆடுகிறார். பாடுகிறார். அந்தர்பல்டி அடித்து சண்டை போடுகிறார். காமெடியும் செய்கிறார். ஒரு கதாநாயகனின் வேலைகளை தெளிவாக செய்திருக்கிறார்.

ஜோதிகாவுடன் சேர்ந்து திருடி, ஏமாற்றி பணம் பறிப்பதற்கு உதவியாக இருக்கிறார், ரேவதி. பாடல் காட்சிகளில் ஜோதிகாவுக்கு இணையாக நடனமும் ஆடுகிறார். சமுத்திரக்கனி, சினிமா டைரக்டராக வருகிறார். அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். அழகாக இருந்தவர், பரட்டை தலையுடன் யோகி பாபுவாக மாறுவது, சிரிப்புதான். தன் அழகான தோற்றம் மாறியதை எண்ணி யோகி பாபு புலம்பும் இடங்கள், ஆரவாரமான நகைச்சுவை. ஆனந்தராஜுக்கு காமெடி வில்லன் வேடம் என்றால் கரும்பு கடிக்கிற மாதிரி. வசனம் பேசியே சிரிக்க வைக்கிறார். மன்சூர் அலிகான் 2 காட்சிகளில் சும்மா வந்து போகிறார். மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல் கரகர குரலில் பேசி, தமாஷ் பண்ணுகிறார்.

ஜெகன், மைம் கோபி, தேவதர்சினி, கும்கி அஸ்வின் என படம் முழுக்க நிறைய நடிகர்கள். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கிறது. ஆனந்தகுமாரின் கேமரா, பல இடங்களில் சாகசம் செய்து இருக்கிறது.

எஸ்.கல்யாண் டைரக்டு செய்திருக்கிறார். ஜோதிகா, ரேவதி ஆகிய இருவரையும் காமெடி பண்ண வைத்து, படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார். அவருடைய முயற்சியில் பாதி வெற்றி பெற்று இருக்கிறார். ஜோதிகா யார், அவர் ரேவதியிடம் எப்படி வந்து சேர்ந்தார்? என்பது, மிகப்பெரிய மர்மம் அல்ல. கிளைமாக்ஸ்சில் சொல்கிற அளவுக்கு...

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com