ட்விட்டர் தளத்திலிருந்து விலகியது ஏன்? - நடிகை குஷ்பு விளக்கம்

நன்மைகளை விட தீமைகள்தான் நிறைய இருக்கு என ட்விட்டர் தளத்திலிருந்து விலகியது குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
Published on

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு பா.ஜ.க. கட்சியின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும், தன்னுடைய அரசியல் செயல்பாடுகள் குறித்தும், எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் கருத்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

மதம் சார்ந்து தனிப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளான போது கூட `ஆம் நான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவள் தான் என்று கூறி குஷ்பு சுந்தர் என்று இருந்த ட்விட்டர் கணக்கை,'குஷ்பு சுந்தர் பா.ஜ.க.வினருக்கு நக்கத் கான்' என்று பெயர் மாற்றம் செய்து தன்னை விமர்சித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்தவர்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 13 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட குஷ்பு, நேற்று திடீரென்று, எந்தக்காரணமும் தெரிவிக்காமல் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியேறி உள்ளார்.

இது குறித்து நடிகை குஷ்பு, "இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவுமில்லை. நிம்மதியாக வாழ விரும்புகிறேன். ட்விட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை விஷயங்களே உள்ளன. ஆகவே, நான் எனது இயல்பில் இல்லை" என்று தெரிவித்தார்

இது குறித்து நடிகை குஷ்பு மேலும் கூறியதாவது:-

`நான் நானாக இருக்க விரும்புகிறேன். ட்விட்டர் பக்கத்தில் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. உண்மையைச் சொல்லணும்னா என்னை ட்விட்டரில் பாலோ செய்தவர்களில் மிகவும் குறைந்த நபர்கள்தான் என்னுடைய ரசிகர்கள். சிலரின் செயல்பாடுகளே அதை எனக்கு உணர்த்தியிருக்கிறது. ட்ரோல் செய்வதற்காகவே ஃபாலோ செய்பவர்கள் அதிகம். ட்விட்டர் பயன்படுத்துவதில் நன்மைகளை விட தீமைகள்தான் நிறைய இருக்கு என்பதை நான் அனுபவரீதியாகச் சொல்கிறேன்.

ட்விட்டர் பயன்படுத்த நம்முடைய முகவரி தேவையில்லை, அடையாளம் காண முடியாது என்பதற்காக பலர் தரமற்ற விமர்சனங்களை முன் வைக்கின்றனர். பொது வாழ்வில் இருக்கும் பெண்களை விமர்சிக்க பயன்படுத்தும் வார்த்தைகளை, அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் பார்த்து உபயோகிப்பார்களா?

இது போன்ற தரமற்ற விமர்சனங்கள் வரும் சூழலில் நான் என் இயல்பை மீறி பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அந்த டென்ஷன் தேவையில்லைனு தோணுச்சு. கடவுள் எனக்கு கொடுத்திருக்க குடும்பத்தோடு நிம்மதியா வாழ விரும்புறேன். அதனால்தான் ட்விட்டரிலிருந்து வெளியேறிட்டேன். என்னுடைய உண்மையான ரசிகர்கள் வெவ்வேறு வழிகளில் எப்போதும் என்னுடன் இணைப்பில்தான் இருப்பார்கள்.

ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேறிட்டாங்க. இனி குஷ்பு அரசியல் பேச மாட்டாங்க என்பது இல்ல. அரசியல் பேச ட்விட்டர் தாண்டி எத்தனையோ இடங்கள் இருக்கு. குஷ்புவின் அரசியலை இனி செயல்பாடுகளில் பார்ப்பீங்க" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com