தரையில் தலையை மோதச்செய்து மெரினாவில் துப்புரவு தொழிலாளி படுகொலை

மெரினாவில் தரையில் தலையை மோதச்செய்து துப்புரவு பணியாளரை கொடூரமாக கொலை செய்த 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தரையில் தலையை மோதச்செய்து மெரினாவில் துப்புரவு தொழிலாளி படுகொலை
Published on

துப்புரவு பணி ஊழியர்

சென்னை திருவல்லிக்கேணி, வெங்கடாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 50). துப்புரவு பணி செய்யும் இவர், வேலைக்கு போகாமல் நேற்று காலை மெரினாவில் நடைபாதையில் படுத்திருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், பச்சையப்பனை தாக்கி உள்ளனர். பின்னர் அவரை தரையில் தர,தரவென இழுத்து சென்றுள்ளனர்.

அதோடு நிறுத்தாமல், கொலை வெறியுடன் செயல்பட்ட அவர்கள் பச்சையப்பனின் தலையை தரையில் மோதச்செய்து கொடூரமாக காலால் மிதித்துள்ளனர். கூச்சல் போட்ட பச்சையப்பனின் குரல் கேட்டு, அங்கு பெண் ஒருவர் ஓடிவந்துள்ளார். அவர் அபயக்குரல் எழுப்பவே, தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

பரிதாப சாவு

உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் பச்சையப்பனை ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றுள்ளனர். தரையில் தலை மோதியதில் பலத்த காயம் அடைந்த பச்சையப்பன் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் கவுதமன் மேற்பார்வையில், மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகிறார்.

அவர்கள் பிடிபட்டால்தான், பச்சையப்பன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பச்சையப்பனின் மனைவி இறந்து விட்டதாகவும், பாலாஜி என்ற ஒரு மகன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com