மெஞ்ஞானபுரம் அருகே பட்டப்பகலில் துணிகரம் விடுதி ஊழியர் வீட்டில் 7½ பவுன் நகை-பணம் திருட்டு மேற்கூரையை பிரித்து மர்மநபர்கள் கைவரிசை

மெஞ்ஞானபுரம் அருகே பட்டப்பகலில் விடுதி ஊழியர் வீட்டில் மேற்கூரையை பிரித்து 7½ பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மெஞ்ஞானபுரம் அருகே பட்டப்பகலில் துணிகரம் விடுதி ஊழியர் வீட்டில் 7½ பவுன் நகை-பணம் திருட்டு மேற்கூரையை பிரித்து மர்மநபர்கள் கைவரிசை
Published on

மெஞ்ஞானபுரம்,

மெஞ்ஞானபுரம் அருகே வெள்ளாளன்விளை சீரணி சாலையைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 53). இவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பாப்பா புஷ்பராணி (48). இவர்கள் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மதியம் கணவன்-மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புதிய துணிகள் வாங்குவதற்காக, திருச்செந்தூரில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் தர்மராஜ் வீட்டின் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.

பின்னர் இரவில் தர்மராஜ், பாப்பா புஷ்பராணி ஆகிய இருவரும் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்ததையும், பீரோவில் இருந்த நகை, பணம் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து, நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com