

திருப்பத்தூர்
கந்து வட்டி கொடுமையால் தேங்காய் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேங்காய் வியாபாரி
திருப்பத்தூர் தாலுகா ஜொல்லகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 35). தேங்காய் வியாபாரி. இவர் இருணாப்பட்டு பகுதியை சேர்ந்த பலரிடம் வியாபாரம் செய்ய சுமார் ரூ.3 கோடியே 50 லட்சம் வரை கடனாக பெற்று உள்ளார். இந்தநிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா நோய்தொற்று காரணமாக வருமானம் இழந்ததால் கனை திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் வட்டியும் முதலும் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் 6 மாதத்தில் தனது சொத்துக்களை விற்று கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கேட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் மனமுடைந்த ஏழுமலை நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை ஏழுமலையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் கந்துவட்டி காரணமாக ஏழுமலை தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி உடலை வாங்க மறுத்து, கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த டவுன்போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் உறவினர்கள் ஏழுமலை உடலைபெற்று சென்றனர். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.