

கோவை
சமூக வலைத்தளங்களில் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
இது தொடர்பாக வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கல்லூரி மாணவி
சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-வது ஆண்டு படித்து வந்தார். அவருக்கும் மற்றொரு தனியார் கல்லூரியில் 3-வது ஆண்டு படிக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கேசவ்குமார் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் செல்போனில் பேசி வந்தனர். மேலும் அவர்கள் இருவரும் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் கேசவ்குமார் தனது குடும்பம் கஷ்டத்தில் இருப்பதால் கல்லூரி கட்டணம் செலுத்த பணம் வேண்டும் என்று மாணவியிடம் கேட்டுள்ளார்.
ரூ.35ஆயிரம் பறிப்பு
அதை உண்மை என்று நம்பிய அந்த மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த ரூ. 35 ஆயிரம் பணத்தை எடுத்து கேசவ் குமாரிடம் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கேசவ்குமார் குடும்ப கஷ்டம் என்பது உள்பட பல பொய்யான காரணங்களை கூறி பல்வேறு கட்டமாக பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறித்துள்ளார்.
மேலும் அந்த மாணவியின் ஏ.டி.எம். கார்டையும் கேசவ்குமார் பறித்து வைத்துள்ளார். இதனால் அவரின் தவறான நோக்கத்தை அந்த மாணவி புரிந்து கொண்டார்.
இதையடுத்து கேசவ்குமாருடன் பேசுவதையும், பழகுவதையும் அந்த மாணவி தவிர்த்து வந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் ஆத்திரமடைந்த கேசவ்குமார் தனது நண்பர்கள் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு பணம் கொடுக்கவில்லை என்றால் செல்போனில் உள்ள படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.அதோடு அவர் பணம் கேட்டு அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் கடந்த சில நாட்களாக அந்த மாணவி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்த மாணவி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் மாணவர் கேசவ் குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.