‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
Published on

தூர்வார வேண்டும்

கோபி அருகே உள்ள வாணிப்புத்தூரில் அரசு மருத்துவமனை அருகில் செல்லும் சாக்கடை பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே உள்ளாட்சி நிர்வாகத்தினர் தேங்கியுள்ள சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், வாணிப்புத்தூர்.

செடி கெடிகள் அகற்றப்படுமா?

ஈரோடு சம்பத்நகர் அருகே சஞ்சய்நகர் ராணி வீதி உள்ளது. இங்குள்ள விநாயகர் கோவிலுக்கு எதிரில் உள்ள ரோட்டில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த ரோடு வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். உடனே செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவிதா, ஈரோடு சம்பத்நகர்.

குவிந்து கிடக்கும் குப்பை

கோபி பாரியூர் ரோட்டு ஓரம் மலைபோல் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பை அள்ளாமல் அங்கு கொண்டு வந்து கொட்டப் படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. பாரியூர் ரோட்டிலேயே 2 இடங்களில் இவ்வாறு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளிச்செல்ல உடனே ஆவன செய்ய வேண்டும்.

விஸ்வம், கோபி.

கழிப்பிட வசதி

அந்தியூர் கீழ்வாணி கல்லாங்காட்டுப்புதூரில் முறையான கழிப்பிட வசதி இல்லை. இதனால் பொது இடங்களையே மக்கள் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதேபோல் ரோட்டின் ஓரம் மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கல்லாங்காட்டுப்புதூருக்கு முறையான கழிப்பிட வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதேபோல் மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், கல்லாங்காட்டுப்புதூர்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் உள்ள ஊஞ்சலூர் பஸ்நிறுத்தத்தில் வேகத்தடை இல்லை. இந்த இடத்தில் ரோடு வளைவாக இருப்பதால் தெற்கே இருந்து வருபவர்களுக்கு வடக்கே இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை. அதேபோல் வடக்கில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தெற்கில் வருபவர்கள் தெரிவதில்லை. பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள் ஊஞ்சலூர் பஸ்நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைப்பார்களா?

பொதுமக்கள், ஊஞ்சலூர்.

ஆபத்தான குழி

ஈரோடு சின்ன சேமூரில் இருந்து ராசாம்பாளையம் செல்லும் ரோட்டு ஓரம் ஆபத்தான குழி உள்ளது. இந்த குழியில் இதுவரை பலர் விழுந்து காயமடைந்துள்ளார்கள். இரவு நேரங்களில் வருபவர்களுக்கு குழி இருப்பதே தெரியாது. அதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ராசாம்பாளையம் ரோட்டு ஓரம் உள்ள குழியை மூட வேண்டும்.

சுரேஷ், ஈரோடு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com