

குளத்தை தூர்வார வேண்டும்
அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் காக்கன் குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளம் முறையாக பராமரிக்கப்படாமல் புதர்மண்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- முருகேந்திரன், அருமநல்லூர்.
மின்கம்பத்தில் படரும் கொடி
கணபதிபுரம் தபால் நிலையம் அருகில் உள்ள மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து வருகிறது. இந்த கொடி மின்கம்பிகளை தொடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு மின்கம்பத்தின் மீது படர்ந்துள்ள கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அமுதா, ராஜாக்கமங்கலம்.
சுகாதார சீர்கேடு
சுசீந்திரம் தாணுமாலயன் நகர் 6-வது தெருவில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவு நீர் வடிந்தோட வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், சுசீந்திரம்.
பேக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பம்
ராமன்புதூர் ராயப்பர் தெருவின் மையப்பகுதியில் ஒரு மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகன ஓட்டிகள் செல்வதற்கும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் இந்த தெருவில் பதிக்கப்பட்டுள்ள அலங்கார தரை கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் மின்கம்பம்பத்தை அகற்றி, அலங்கார தரைகற்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மகாராஜன், நாகர்கோவில்.