வாட்ஸ்அப் மூலம் புகார்: பெண்ணின் வீட்டிற்கே சென்று பட்டா வழங்கிய கலெக்டர்

நிலப்பிரச்சினையால் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்த தகவலை வாட்ஸ்அப் மூலம் பெண் ஒருவர் புகார் அளித்தார். 24 மணிநேரத்தில் அவரது புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று வீட்டுமனைப்பட்டாவை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
வாட்ஸ்அப் மூலம் புகார்: பெண்ணின் வீட்டிற்கே சென்று பட்டா வழங்கிய கலெக்டர்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே சொர்ணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மனைவி மணியம்மை. குடிசை வீட்டில் வசித்து வரும் இவர், ஓட்டுவீடு கட்ட முயற்சி செய்தார். ஆனால் அந்த நிலம் தொடர்பாக சிலர் பிரச்சினை செய்து வந்தனர். இது தொடர்பாக கலெக்டருக்கு வாட்ஸ்அப் மூலம் மணியம்மை புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்யும்படி பேராவூரணி தாசில்தாருக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார்.

உடனே தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து மேற்படி நிலம் புஞ்சை தரிசு வகைபாடு கொண்டது எனவும், வீட்டுமனைப்பட்டா வழங்க ஏதுவான நிலம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மணியம்மையின் கோரிக்கையை 24 மணிநேரத்தில் நிறைவேற்றும் வகையில் வீட்டுமனைப்பட்டாவை சொர்ணக்காடு கிராமத்தில் உள்ள மணியம்மையின் வீட்டிற்கே கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்றுஇரவு நேரில் சென்று வழங்கினார். வீட்டுமனை பட்டாவை பெற்று கொண்ட மணியம்மை, கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் மருந்து, உணவு குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் குறித்தும் கேட்டார்.

தொடர்ந்து பன்னாட்டு ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரத்தை தொடங்கி வைத்தார். இந்த எந்திரம் மூலம் 20 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம்.

பின்னர் பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), அசோக்குமார் (பேராவூரணி), கூடுதல் கலெக்டர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா, உதவி கலெக்டர் பாலச்சந்தர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் திலகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com