நிலத்தடிநீர் திருட்டை கண்டித்து தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

செங்குன்றம் அருகே நிலத்தடி நீர் திருட்டை கண்டித்து பொதுமக்கள் தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலத்தடிநீர் திருட்டை கண்டித்து தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்
Published on

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் சிலர் ராட்சத ஆழ்துளை கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை திருடி தண்ணீர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் கண்ணம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என கடந்த மாதம் கண்ணம்பாளையம் பொதுமக்கள் சில தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நிலத்தடி நீர் திருடும் நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று கண்ணம் பாளையம் பகுதியில் 3 லாரி களை பொதுமக்கள் சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முறையாக புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தண்ணீர் லாரிகளை விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com