கொலை வழக்குகளில் தொடர்பு: 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் இருவேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
கொலை வழக்குகளில் தொடர்பு: 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

சேலம்,

சேலம் களரம்பட்டி வீரவாஞ்சி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34), பாத்திமா நகரை சேர்ந்தவர் உமர் (34). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் கிச்சிப்பாளையம் நாராயண நகரை சேர்ந்த அகமதுபாஷா என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்தனர். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சதீஷ், உமர் ஆகியோரை கைது செய்தனர்.

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (21). இவர் கடந்த மாதம் டவுன் மேட்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்றுவிட்டார். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருவேறு கொலை வழக்குகளில் கைதான 3 பேரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், குமார் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து சதீஷ், உமர், மனோகரன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com