

ராமேசுவரம்,
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிளிநொச்சி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
43 மீனவர்கள் கைது
ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதனிடையே ஒரு மாதத்திற்கு மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரையும், கடந்த 27-ந்தேதியன்று விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
43 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
அனைவருக்கும் கொரோனா
இந்த நிலையில் ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்களையும் விமானம் மூலம் தமிழகம் அனுப்பும் பணிகள் நடைபெற்று வந்தன. அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 43 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது,. இந்த பரிசோதனை முடிவில் மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 43 மீனவர்களும் இலங்கையில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த தகவலை ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாசுக்கு இலங்கை பிரதமரின் தனிச் செயலாளர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீனவர்கள் அனைவரும் குணமடைந்த பின்னர் விமானம் மூலம் தமிழகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.