

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 16-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என 469 இடங்கள் மற்றும் 36 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 505 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதில் டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 5,720 பேர் முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 6 ஆயிரத்து 480 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 30 ஆயிரத்து 912 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.