எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் வெளியான விவகாரம்; மாணவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு- ஆசிரியர் பணி இடைநீக்கம்

விஜயாப்புராவில் எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மாணவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் வெளியான விவகாரம்; மாணவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு- ஆசிரியர் பணி இடைநீக்கம்
Published on

பெங்களூரு:

வினாத்தாள் வெளியானது

கர்நாடகத்தில் தற்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது தேர்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முத்தேபிகாலில் பல்வேறு நபர்களின் வாட்ஸ்-அப்பில் சமூக அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள் வலம் வந்தது.

கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தேர்வு தொடங்கு முன்பாக வினாத்தாள் வெளியாகவில்லை என்பதும், தேர்வு தொடங்கிய பின்பு தான் வினாத்தாள் வெளியாகி இருப்பதாகவும், வினாத்தாள் கிடைத்ததும் மாணவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டு இருப்பதை உறுதி செய்தார்கள்.

மாணவர் மீது வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக முத்தேபிகால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது முத்தேபிகால் அருகே தகலகி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர் மூலம் தான் வினாத்தாள் வெளியானதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மாணவர் மீது முத்தேபிகால் போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் வினாத்தாள் வெளியான வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியரான மடிகேஷ்வரா கிராமத்தை சேர்ந்த பி.எஸ்.போலேசி என்பவரை பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com