ஆயுத பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்

ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஆயுத பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
Published on

புதுச்சேரி

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

பொதுமக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.

இதனால் புதுவை பாரதி வீதி, கொசக்கடை வீதி, முதலியார்பேட்டை முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, சாரம் பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பல்வேறு இடங்களில் புற்றீசல் போல் கடைகளும் முளைத்துள்ளன.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் இன்று மாலை முதலே ஆயுதபூஜைக்கு படையல்கள் போட்டு வழிபட்டனர்.

பூக்கள் விலை உயர்வு

ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.200 வரையில் விற்ற மல்லிகைப்பூ விலை உயர்ந்து இன்று ரூ.600-க்கு விற்பனை ஆனது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன்விவரம் வருமாறு: (பழைய விலை அடைப்பு குறிக்குள்) கனகாம்பரம்- ரூ.300 (ரூ.150), சாமந்தி- ரூ.240 (ரூ.80), ரோஜா-ரூ.280 (ரூ.100), அரளி ரூ.450 (ரூ.150), கேந்தி-ரூ.30 (ரூ.10) விற்பனை ஆனது.

இதேபோல் பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவை இணைந்து ஒரு செட் ரூ.25 முதல் ரூ.160 வரையும், வெள்ளை பூசணிக்காய் ரூ.25 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனை ஆனது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com