தாமதமாக கொண்டு வந்ததாக கூறி 'பீட்சா' டெலிவரி ஊழியர்களை தாக்கிய வாடிக்கையாளர்; வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

தாமதமாக கொண்டு வந்ததாக கூறி ‘பீட்சா’ டெலிவரி ஊழியர்களை தாக்கிய வாடிக்கையாளர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாமதமாக கொண்டு வந்ததாக கூறி 'பீட்சா' டெலிவரி ஊழியர்களை தாக்கிய வாடிக்கையாளர்; வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு
Published on

புனே, 

தாமதமாக கொண்டு வந்ததாக கூறி 'பீட்சா' டெலிவரி ஊழியர்களை தாக்கிய வாடிக்கையாளர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊழியர்கள் மீது தாக்குதல்

புனே நகரை சேர்ந்தவர் சேத்தன் பட்வால். இவர் வகோலி பகுதியில் உள்ள பிரபல பீட்சா கடை ஒன்றில் ஆர்டர் செய்திருந்தார். பீட்சாவை ருஷிகேஷ் அன்னபூர்வே என்ற ஊழியர் டெலிவரி செய்தார். ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சேத்தன் பட்வால் டெலிவரி ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட ருஷிகேஷ் அன்னபூர்வே சக ஊழியர்கள் 2 பேருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சக ஊழியர்கள் சேத்தன் பட்வாலிடம் நியாயம் கேட்டனர். இது சேத்தன் பட்வாலுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அதில் ஒருவரின் சட்டை காலரை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கினார்.

வானத்தை நோக்கி துப்பாக்கியால்...

பின்னர் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த தனது காரை நோக்கி ஓடிய அவர், அதில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஊழியர்களை பயமுறுத்த வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பீட்சா டெலிவரி ஊழியர்கள் இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சேத்தன் பட்வாலை கைது செய்தனர். மேலும் அவர் மீது மரணத்தை விளைவிக்கும் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில், சேத்தன் பட்வால் கைத்துப்பாக்கிக்கு உரிமம் வைத்திருந்தது தெரியவந்தது. பீட்சா உணவை தாமதமாக கொண்டு வந்ததற்காக ஊழியர்களை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கியதுடன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com