கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டம்

புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழில்நுட்பத்துறை செயலர் மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் நெடுஞ்செழியன், மாவட்ட கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சைபர் பாடத்திட்டம்

கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

புதுச்சேரியில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். ஸ்கில்டா (Skillda) மூலமாக 4000 தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.

இளநிலை கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. இது மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் அதற்கான திட்டம் வகுக்க வேண்டும்.

விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாக புதுச்சேரியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

சுகாதாரத்துறை கலந்தாய்வு

முன்னதாக புதுவை சுகாதாரத்துறையின் கலந்தாய்வு கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் குஜராத் டயாலிசிஸ் முறை தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளின் கணக்குகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கவர்னர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறை செயலாளர் பங்கஜ்குமார் ஜா, சார்பு செயலாளர் கந்தன், இயக்குனர் ஸ்ரீராமுலு உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com