தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

பயனற்ற கண்காணிப்பு கேமராக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் அறந்தாங்கி பகுதியில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான கட்டுமாவடி முக்கம், அண்ணாசிலை, பட்டுக்கோட்டை சாலை, காரைக்குடி சாலை சோதனை சாவடி உள்ளிட்ட பிரதான இடங்களில் சாலையின் ஓரத்தில் 10-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் அனைத்தும் செயல்படாமல் உள்ளது.

பொதுமக்கள், அறந்தாங்கி, புதுக்கோட்டை.

சுகாதார சீர்கேடு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் 2 கிலோ மீட்டர் தூரம் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் மீன் கழிவுகள், வாழைத்தார் கழிவுகள் ஆகியவற்றை இவ்வழியாக செல்வோர் சாலையோரங்களில் மலைபோல் கொட்டி வருகின்றனர். மேலும் இவற்றிற்கு தீ வைப்பதினால் இப்பகுதி புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம், புதுக்கோட்டை.

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

கரூர் மாவட்டம் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகே வள்ளுவர்நகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வள்ளுவர்நகர், கரூர்.

சாலையை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்

கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் இருந்து கட்டிப்பாளையம் செல்வதற்கு புக்ழூர் வாய்க்கால் ஓரத்தில் நெடுகிலும் தார் சாலை போடப்பட்டுள்ளது. தார் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் நான்குசக்கர வாகனங்கள் செல்லும்போது ஒதுங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருக்காடுதுறை, கரூர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com