

திண்டுக்கல்:
புதிய தார்சாலை அமைக்கப்படுமா?
திண்டுக்கல் பாரதிபுரத்தில் ஒருசில தெருக்களில் உள்ள தார்சாலைகள் சேதம் அடைந்துவிட்டன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். -மூர்த்தி, பாரதிபுரம்.
சேதம் அடைந்த சாலை
திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் அருகில் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துவிட்டது. சாலையின் நடுவே பெரிய பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். -மகாலட்சுமி, திண்டுக்கல்.
சாக்கடை கால்வாய் வசதி
ஆத்தூரை அடுத்த சித்தரேவு ஊராட்சி கதிர்நாயக்கன்பட்டியில் ஒருசில தெருக்களில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழை பெய்தால் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். -வீரராகவன், கதிர்நாயக்கன்பட்டி.
குப்பைகள் தீவைத்து எரிப்பு
தேனி சுப்பன் தெருவில் குப்பைகள் மொத்தமாக குவித்து தீ வைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் புகையால் சிறுவர்கள், முதியவர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை தீவைத்து எரிப்பதை தடுப்பதோடு, தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், தேனி.