

பழுதடைந்த பள்ளி கட்டிடம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்கட்டமைப்பு கம்பிகள் தெரியும் அளவுக்கு இடிந்துள்ளது. வெளிப்புறம் வராண்டாவில் உள்ள சன்சேடு கூரைகளும் இடிந்து உள்ளது. மாணவர்கள் அமர தகுதியற்ற கட்டிடம் என மாவட்ட கல்வி அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலரும் பார்வையிட்டு இந்தக் கட்டிடத்தை உடனடியாக இடிக்க வேண்டும், எனக் கூறி சென்றுள்ளனர். தலைமை ஆசிரியர் பலமுறை உரிய முறையில் மனுக்கள், போட்டோக்களுடன் அளித்துள்ளார். மேலும் முதல்-அமைச்சர் தனிப் பிரிவுக்கும் மனுக்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ஆனாலும் இதுநாள் வரை எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவில்லை. ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.
-ஹரிநாராயணன், வாலாஜா.
புதிய கட்டிடம் கட்ட வண்டும்
சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. அதில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தக் கட்டிடம் கட்டி 35 ஆண்டுகள் ஆகிகிறது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் கட்டிடத்தின் மேல் தளம், பக்கவாட்டு சுவர் விரிசல் விட்டும், சிமெண்டு பூச்சுகள் உடைந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. உடனடியாக அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
-தாமோதரன், சோளிங்கர்.
குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அருகே திரு.வி.க. நகர் செல்லும் வழியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. முன்பு இவ்விடத்தில் நகராட்சியின் இரும்பு குப்பைத்பெட்டிகளை வைத்திருந்தனர். ஆனால் தற்போது குப்பைத்தொட்டி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குப்பைகளை சாலையிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதிகாரிகள் மீண்டும் குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும்.
-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.
கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பிகள்
அரக்கோணம் தாலுகா சித்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கம்பிகள் கைக்கு எட்டும் உயரத்தில் தாழ்வாக உள்ளது. நிலத்தில் டிராக்டரால் உழவு, புழுதியடிக்கும் பணிய மேற்கொள்ளும்போது டிராக்டரின் குடை மின்கம்பி மீது உரசும் அபாயம் உள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பிகளை சற்று உயரத்தில் இழுத்துக்கட்ட வண்டும்.
-சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர் சித்தாம்பாடி.
நகரும் படிக்கட்டுகள் பழுது
காட்பாடி ரெயில் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கப்பட்டது. ரயில் நிலையத்துக்குள் செல்லும் பயணிகளும் ரயிலில் இருந்து வெளியே வரும் பயணிகளும் அதைப் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்து இயங்கவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். ரெயில்வே நிர்வாகம் விரைந்து சீரமைத்து நகரும் படிக்கட்டுகளை இயங்கச் செய்ய வேண்டும்.
-கிருஷ்ணன், காட்பாடி.
கிடப்பில் பாடப்பட்ட சாலை பணி
அரக்கோணம் பாலகிருஷ்ணாபுரம், முசல்நாயுடுகண்டிகை, வாணியம்பேட்டை ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் சாலையை தார் சாலை அமைக்க பங்காரம்மாகண்டிகை முதல் வாணியம்பேட்டை வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தார் சாலை அமைக்காததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் விரைந்து தார் ஊற்ற வேண்டும்.
-நாகராஜன், பாலகிருஷ்ணாபுரம்.
நடைபாதை தடுப்புகள் சீராக அமைக்க வேண்டும்
வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக சமீபத்தில் நடைபாதை அமைக்கப்பட்டது. இதில் ஒரு சில இடங்களில் சரிவர கற்கள் மற்றும் தடுப்புக்கம்பிகள் அமைக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடைபாதை அமைக்கும் பணி சீராக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.