

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குறுகலான தெருவில் குப்பைகள்
திண்டுக்கல் சாலைரோட்டில் இருந்து 2 வங்கிகளுக்கு நடுவே பஸ்நிலையத்துக்கு குறுகலான தெரு செல்கிறது. இந்த தெருவின் தொடக்கத்தில் சாக்கடை கால்வாய்க்கு மேல் ஒருவர் நடக்கும் அளவு சிமெண்டு சிலாப்பு போட்டு வைத்துள்ளனர். இதனால் தெருவில் குறைந்த அளவிலான மக்களே செல்கின்றனர். மேலும் தெரு முழுவதும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் மக்கள் நடமாட முடியவில்லை. எனவே தெருவை சுத்தம் செய்ய வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
சாலை அமைக்க வேண்டும்
பழனி அருகே உள்ள பச்சளநாயக்கன்பட்டியில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக ஏற்கனவே சேதமடைந்த சாலையை பெயர்த்து எடுத்தனர். அதன்பின்னர் புதிதாக சாலை அமைக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தெரு முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. முதியவர்கள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே விரைவில் சாலை அமைக்க வேண்டும்.
-துரைமுருகன், பச்சளநாயக்கன்பட்டி.
ரேஷன்கடைக்கு கட்டிட வசதி
குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் பகுதிநேர ரேஷன்கடை, ஊர்ப்புற நூலக கட்டிடத்தில் செயல்படுகிறது. அந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்து விட்டதால் மழைக்கு தண்ணீர் ஒழுகி உணவு பொருட்கள் சேதம் அடைகின்றன. எனவே ரேஷன்கடைக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் அதை முழுநேர ரேஷன்கடையாக மாற்ற வேண்டும்.
-சண்முகம், கோவிலூர்.
அடிப்படை வசதிகள் தேவை
பழனி அருகே மானூர் அண்ணாநகரில் தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லை. இரவில் மழைக்காலத்தில் தெரு சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் தெருவிளக்கு இல்லாததால் இரவில் பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யனார், மானூர்.
மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து தோட்டனூத்து அருகே உள்ள குமாரபாளையம் வழியாக இயக்கப்பட்ட பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
-சீனிவாசன், குமாரபாளையம்.