ராமநத்தம் அருகே விளைநிலத்தில் புகுந்து காட்டெருமைகள் அட்டகாசம் வீடுகளில் இருந்த பசுமாடுகளையும் முட்டி காயப்படுத்தின

ராமநத்தம் அருகே விளைநிலத்தில் புகுந்து காட்டெருமைகள் அட்டகாசம் செய்தன. மேலும் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பசுமாடுகளையும் முட்டி காயப்படுத்தி சென்றுவிட்டன.
ராமநத்தம் அருகே விளைநிலத்தில் புகுந்து காட்டெருமைகள் அட்டகாசம் வீடுகளில் இருந்த பசுமாடுகளையும் முட்டி காயப்படுத்தின
Published on

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்துள்ள லெக்கூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வயல்களில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே காப்பு காடு அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் நாங்கூர் காப்புகாட்டில் இருந்து காட்டெருமைகள் லெக்கூர் கிராமப்புற பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்த எருமை மாடுகள் பயிர்களை சேதப்படுத்துவதுடன், வயல்வெளி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டில் வளர்த்து வரும் பசுமாடுகளையும் முட்டி காயப்படுத்திவிடுகின்றன.

பயிர்கள் சேதம்

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கோவிந்தன் என்ற விவசாயிக்கு நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் எழுந்து பார்த்தார். அப்போது அவர் சாகுபடி செய்திருந்த நிலக்கடலை வயலுக்குள் காட்டெருமைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி, அவற்றை மேய்ந்து கொண்டு இருந்தன.

உடன் அவைகளை அங்கிருந்து கோவிந்தன், துரத்த முயன்ற போது, அவரை அந்த மாடுகள் முட்ட முயன்றது. இதனால் உயிருக்கு பயந்த அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். சிறிது நேரத்தில் காட்டெருமைகள் அங்கிருந்து சென்று விட்டன.

இதேபோல், அந்த பகுதியில் மாட்டுக்கொட்டகைகளில் கட்டப்பட்டு இருந்த பசு மாடுகளையும் காட்டெருமைகள் முட்டி காயப்படுத்தி சென்றுவிட்டன. இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை தேவை

இதுகுறித்து அந்த பகுதியினர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக காட்டெருமைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உயிர் சேதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம், தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த பகுதிமக்களையும், வேளாண் பயிர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com