தாராவியில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

தாராவியில், அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தமிழர் ஒருவரின் வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தாராவியில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
Published on

மும்பை,

தாராவியில், அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தமிழர் ஒருவரின் வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.

மும்பை தாராவி 90 அடிசாலையில், காமராஜர் நினைவு பள்ளி எதிரே வ.உ.சி டவர் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 7 மாடி கொண்ட கட்டிடத்தில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் 4வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். கட்டிடத்தில் முதியவர்கள் சிலர் புகை மூட்டம் காரணமாக வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை அக்கட்டிடத்தை சேர்ந்த வாலிபர்கள் பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், தீ மளமளவென வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கட்டிடத்திற்குள் புகுந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் புகை மூட்டம் காரணமாக அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

இதனால் தீயணைப்பு படை வீரர்கள் செயற்கை சுவாச சிலிண்டர்களை மாட்டிக்கொண்டு அதிரடியாக கட்டிடத்திற்குள் புகுந்து மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தாராவி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்த தீ விபத்து பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் ஜேக்கப்(வயது52) என்ற தமிழர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. ஜேக்கப்பின் மனைவி சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.

நேற்று ஜேக்கப் வேலைக்கு சென்ற பின்னர் அவரது மகன் ஜோசப்(28) வீட்டில் இருந்தார். பிற்பகல் 2 மணியளவில் அவர் வீட்டை பூட்டிவிட்டு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் கம்ப்யூட்டர் வயரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் ஜேக்கப் வீட்டில் இருந்த நகை, பணம், டி.வி. உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டன. இதுபற்றி தாராவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com