கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் விரும்பிய பாடத்தை படிக்க கல்விமுறை உருவாக்கம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் விரும்பிய பாடத்தை படிக்க புதிதாக கல்விமுறை உருவாக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் விரும்பிய பாடத்தை படிக்க கல்விமுறை உருவாக்கம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
Published on

நாமக்கல்,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனம் வழியாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் தொழில் சார்ந்த கல்வி பெறுவதற்கு மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் புதிதாக கல்வி முறை உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், இடையில் விடுபட்ட பள்ளி கல்வியை தொடர்ந்திடவும், தம்முடைய இளம் வயதில் பள்ளியில் படிக்க இயலாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கும் இது ஒரு வாய்ப்பை உருவாக்கி தருகிறது.

இதன் மூலம் விரும்பிய பாடத்தை விரும்பிய நேரத்தில் படித்து தேர்ச்சி பெறவும், பள்ளி பாடங்களுடன் தொழிற்கல்வி பயிலுவதற்கும் முடியும். மிக குறைவான சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களோடு முந்தைய கல்வி முறையில் பெற்ற 2 பாடங்களின் மதிப்பெண்கள் அல்லது ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண்களை உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு மாற்றிக்கொள்ளும் வசதியை இக்கல்வித்திட்டம் பெற்று உள்ளது. தங்களுடைய அடிப்படை கல்வியை பெற இயலாதவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

இத்திட்டம் அனைவருக்கும் சென்றடையும் வகையில் மிக எளிமையாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் உச்ச வயது வரம்பு கிடையாது. 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். இதனுடைய சிறப்பம்சம் என்ன வென்றால், தங்களுக்கு விருப்பமான 5 பாடங்களை தேர்ந்தெடுத்து தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து, எளிதாக தங்களுடைய அடிப்படை கல்வியை பயில இயலும்.

மேலும், கணக்கு, அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களை கடினமாக நினைக்கும் மாணவர்கள் அந்த நிலையை மாற்றி, அவரவர் திறமை கேற்றாற்போல் தமக்கு பிடித்த வேறு ஏதேனும் 5 பாடங்களை படிக்க இயலும் வசதி தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் உகந்ததாக இருக்கும். இக்கல்வி திட்டத்தை மாவட்டத்திற்கு குறைந்தது 5 பள்ளிகளில் முனைப்புடன் செயல்படுத்த சிறுபான்மையினர் நல இயக்ககம் முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை www.nios.ac.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விரிவான விவரங்களுக்கு மண்டல இயக்குனர், தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை- 600005 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com