

திருவள்ளூர்,
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட துணை செயலாளர்கள் புஜ்ஜி முரளிகிருஷ்ணன், சரவணன், திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட அவைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை படுகொலை செய்த தமிழக அரசை கண்டித்து அப்போது அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது அவர்கள் திடீரென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எல்.கே.சுதீஷ் உள்பட தே.மு.தி.க.வினர் திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ் உள்பட தே.மு.தி.க.வினர் 650 பேரை கைது செய்தனர். அனைவரையும் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.