டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: காரிக்கூட்டம் கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக சர்வ மத கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி காரிக்கூட்டம் கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: காரிக்கூட்டம் கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரம்
Published on

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் கிராமங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் ஆய்வு செய்து வருகிறார். அப்போது அனைத்து வீதிகள், கோழி, ஆடு விற்பனை செய்யும் இடங்கள், புதிய கட்டிடம் கட்டுமானம் நடைபெறும் இடங்கள், பள்ளிக்கூடங்கள், நகராட்சி, ஊராட்சி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு வருகிறார்.

இதேபோல ஆர்.டி.ஓ. பேபி தலைமையில் சுகாதார துறையினர், அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் குழுக்களாக மாவட்டம் முழுவதும் திடீர் ஆய்வு செய்து கொசு உற்பத்திக்கான காரணங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள இந்து, முஸ்லிம் நிர்வாகிகளை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து டெங்கு எதனால் உருவாகிறது, கிராமங்களை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது, வீட்டின் உரிமையாளர்கள் கழிவுநீரை தெருக்களில் விடுவதால் ஏற்படும் தீமைகள் போன்றவற்றை கலெக்டர் நடராஜன் விளக்கி கூறி சம்பந்தப்பட்ட கிராம நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களிடம் டெங்கு பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினருடன் இணைந்து பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார். வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் சுகாதாரத்தை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி முன்னாள் ஊராட்சி தலைவரும், காரிக்கூட்டம் முஸ்லிம் ஜமாத் தலைவருமான நூர்முகமது காரிக்கூட்டம் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து கிராமத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்களை அழைத்து கிராமத்தில் காய்ச்சல் பரவாமல் இருக்க அனைவரும் சபதம் ஏற்பதுடன், தூய்மையான கிராமமாக காரிக்கூட்டம் உருவாக அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணியை அவர் தொடங்கி வைத்தார். இதில் சக்கரக்கோட்டை, குயவன்குடி கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், ஆதிலிங்கம், மண்டல துணை தாசில்தார் கதிரவன், வக்கீல் சண்முகநாதன், காரிக்கூட்டம் ஜமாத் பிரமுகர்கள், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் பொன்னுத்தாய், ஊராட்சி செயலர் பத்மநாதன் உள்பட பலர் கலந்துகொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com