‘‘எத்தனை தடைகள் வந்தாலும் முன்னேறி கொண்டே இருப்பேன்’’ பொதுக்கூட்டத்தில், ஜெ.தீபா பேச்சு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிடும் ஜெ.தீபா, நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், ‘‘எத்தனை தடைகள் வந்தாலும் முன்னேறி கொண்டே இருப்பேன்’’, என்று பேசினார்.
‘‘எத்தனை தடைகள் வந்தாலும் முன்னேறி கொண்டே இருப்பேன்’’ பொதுக்கூட்டத்தில், ஜெ.தீபா பேச்சு
Published on

ராயபுரம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டை ஏ.ஈ.கோவில் தெருவில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேரவை சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெ.தீபா தேர்தல் ஆணையத்தால் தனக்கு ஒதுக்கப்பட்ட படகு சின்னத்தை பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்.

பொதுக்கூட்டத்தில் ஜெ.தீபா பேசியதாவது:

ஜெயலலிதா ஆசியுடன் ஆர்.கே.நகர் தொகுதியில் முதன்முதலாக போட்டியிடும் நான் படகு சின்னத்தில் நின்று வெற்றி பெறுவேன். நான் அரசியலில் நிற்க எத்தனை தடைகள் வந்தாலும், மீண்டும் மீண்டும் முன்னேறிக்கொண்டே இருப்பேன். எந்த ஒரு தீய சக்தியாலும் என்னுடைய லட்சிய பயணத்தை ஒழிக்க முடியாது. ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர், கால்வாய் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பேன். மீனவர்களுக்கு இலவச படகுகள் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டம் முடிந்து அவர் செல்லும்போது, பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த அவரின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் பத்திரிகையாளர்களை ஜெ.தீபாவை நெருங்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது.

இக்கூட்டத்தில் பேரவையின் ஆர்.கே.நகர் தொகுதி பொறுப்பாளர் ஈ.சி.ஆர்.ராமச்சந்திரன், பேரவை மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தொண்டன் சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com