வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் - திவ்யா


வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் - திவ்யா
x
தினத்தந்தி 24 July 2022 1:30 AM GMT (Updated: 24 July 2022 1:30 AM GMT)

முதலில் கலப்படம் இல்லாத நாட்டுச் சர்க்கரையை விற்பனை செய்து வந்தேன். பின்னர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு மூன்றையும் விற்பனை செய்தேன். எனது மாமனார் வீட்டில் கடலை விவசாயம் செய்தார்கள். அதை மதிப்புக்கூட்டி கடலை எண்ணெய்யாக விற்கத் தொடங்கினேன். இவ்வாறு தற்போது 25 வகையான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.

வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பல பெண்கள், படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். அந்தவகையில், வலைத்தளத்தில் தனக்கென சந்தையை உருவாக்கி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார் திவ்யா. தான் வளர்ந்ததோடு மட்டுமில்லாமல், தன்னைப் போன்ற சிந்தனை கொண்ட பெண்களை சுய தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட வைத்திருக்கிறார். அவரது பேட்டி.

"என்னுடைய சொந்த ஊர் நாமக்கல். தற்போது சேலம் ஆரமங்கலத்தில் வசித்து வருகிறேன். பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படித்துவிட்டு, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் சில ஆண்டுகள் பணியாற்றினேன்.

நான் கர்ப்பமாக இருந்தபோதுதான் உடல் ஆரோக்கியம் பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தால், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை வாங்கி பயன்படுத்தினேன். ஆனால், அதில் கலப்படம் இருந்தது தெரிய வரவே, நாட்டுச் சர்க்கரை தயாரித்து வரும் உறவினர் ஒருவரிடம் இருந்து வாங்கி, சொந்தத்தேவைக்கு பயன்படுத்தினேன். அதன் தரமும், சுவையும் சிறப்பாக இருந்தது. அப்போதுதான் கலப்படமற்ற, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் எண்ணம் வந்தது.

அவ்வாறு உருவானதுதான் எனது நிறுவனம். முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விற்பனையை தொடங்கினேன். தற்போது தனியாக இணையதளம் தொடங்கி ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறேன்.

என்னென்ன பொருட்கள் விற்பனை செய்கிறீர்கள்?

முதலில் கலப்படம் இல்லாத நாட்டுச் சர்க்கரையை விற்பனை செய்து வந்தேன். பின்னர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு மூன்றையும் விற்பனை செய்தேன். எனது மாமனார் வீட்டில் கடலை விவசாயம் செய்தார்கள். அதை மதிப்புக்கூட்டி கடலை எண்ணெய்யாக விற்கத் தொடங்கினேன். இவ்வாறு தற்போது 25 வகையான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.

சிறுதானியங்களில் உணவுப் பொருட்கள் தயாரித்து வருகிறேன். ஐதராபாத், மும்பை மற்றும் புனே ஆகிய பகுதிகளில் வசிக்கும் 5 பெண்களுக்கு, எனது தொழிலை கற்றுக்கொடுத்து, பொருட்களை வழங்கி அவர்களையும் தற்போது சுய தொழிலில் ஈடுபட வைத்திருக்கிறேன்.

உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்ன?

தொழிலில் சிறப்பாக விளங்கியதால் பெண் தொழில் முனைவோர் குழுவின் சார்பாக எனக்கு 'சாதனைப் பெண்கள்' விருது கிடைத்தது. கிளப் ஹவுஸ் செயலியில் பெண் தொழில் முனைவோரை ஒருங்கிணைத்து தொடர்ந்து 100 மணி நேரம் உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அடுத்ததாக தொடர்ந்து 279 மணி நேரம் உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இதற்கு ஆசிய புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பாக உலக சாதனை சான்றிதழ் கிடைத்தது.

நான் தொழில் தொடங்கி 2 வருடத்துக்கு மேல் ஆகிறது. தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறேன். என்னைப்போல மற்ற பெண்களும் விடாமுயற்சியோடு, வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எளிதாக வெற்றி பெறலாம்.


Next Story