குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மரப் பொம்மைகள்


குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மரப் பொம்மைகள்
x
தினத்தந்தி 13 Nov 2022 1:30 AM GMT (Updated: 13 Nov 2022 1:30 AM GMT)

கையில் இருந்த 3 ஆயிரம் ரூபாயை வைத்து, சாலையோரத்தில் பொம்மைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்து, அடுத்ததாக மேலும் சில பொம்மைகளுடன் தள்ளுவண்டியில் தொழில் செய்ய ஆரம்பித்தேன்.

பொள்ளாச்சி அருகே நேமம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சாருமதி. கணினி அறிவியலில் பட்டம் பெற்ற இவர், குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்காத மரப் பொம்மைகள் விற்பனை செய்யும் அங்காடியை நடத்தி வருகிறார். இவர் இளம் தொழில் முனைவோராக மாறிய பயணம் சுவாரசியமானது. அது குறித்து அவர் உரையாடியதில் இருந்து..

"படித்து முடித்ததும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வந்தேன். 2020-ம் ஆண்டு பலரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட கொரோனா, எனது வாழ்க்கையிலும் விளையாடியது. வேலை போனது. இதனால் பொருளாதார அளவில் சிரமப்பட்ட நான் மன அழுத்தத்துக்கு ஆளானேன். அப்போது தான் இனி நாமே சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

அப்போது தான் குழந்தைகளுக்காக உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை தயாரிக்கப்படும் பொம்மைகள் அனைத்துமே பிளாஸ்டிக்கால் செய்யப்படுவது நினைவுக்கு வந்தது. குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக இயற்கையான, மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுச் சாமான்களை விற்பனை செய்ய ஆரம்பித்தேன்".

கொரோனா காலகட்டத்தில் முதலீட்டிற்கு என்ன செய்தீர்கள்?

என்னுடைய அப்பா நெசவுத் தொழிலாளி. குடும்பத்தினர் எனக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியாத நிலை இருந்தது. கையில் இருந்த 3 ஆயிரம் ரூபாயை வைத்து, சாலையோரத்தில் பொம்மைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்து, அடுத்ததாக மேலும் சில பொம்மைகளுடன் தள்ளுவண்டியில் தொழில் செய்ய ஆரம்பித்தேன். தற்போது அடுத்தகட்ட முயற்சியாக கோவை கணபதிபுதூர் பகுதியில் அங்காடி நடத்தி வருகிறேன்.

என்ன மாதிரியான பொம்மைகளை விற்பனை செய்து வருகிறீர்கள்?

பெரும்பாலான விளையாட்டு சாமான்களை வேப்ப மரத்தைக் கொண்டு தயாரித்து வருகிறோம். 1 மாதம் முதல் ஓராண்டு வரையிலான குழந்தைகள் விளையாடத் தேவையான பொம்மைகள், குழந்தைகளின் கல்வி அறிவை வளர்க்க உதவும் பொம்மைகள், கொலு பொம்மைகள், அலங்கார பொம்மைகள் மட்டுமின்றி வீட்டு உபயோகத்திற்காக மரத்தால் ஆன கரண்டி, ஸ்பூன், பவுல்கள், மூங்கிலால் செய்யப்பட்ட குவளைகள் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறேன். குழந்தைகளுக்கு இடுப்பு எலும்பைப் பலப்படுத்தப் பயன்படும் நடை வண்டிகள் பல வடிவங்களில் உள்ளன.

மர பொம்மைகளுக்கு மரத்தில் இருந்து வரும் பிசினை சூடுபடுத்தி அதனுடன் இயற்கையான வண்ணங்களைக் கலந்து வண்ணம் பூசுகிறோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கடை தற்போது மன நிறைவுடன் நல்ல வருமானத்தையும் தருகிறது. அடுத்ததாக ஆன்லைன் விற்பனை மூலம் இந்தியா முழுவதும் எனது பொம்மைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். எனது டிஜிட்டல் மார்க்கெட்டிங் அனுபவமும் தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த உதவியாக உள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற சோசியல் மீடியா மூலமாகவும் விற்பனை செய்து வருகிறேன். அடுத்ததாக இன்னும் சில பகுதிகளில் கடைகளைத் திறக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன்.


Next Story