மழைக்காலத்தில் பயணிக்கும் பெண்களுக்கான குறிப்புகள்


மழைக்காலத்தில் பயணிக்கும் பெண்களுக்கான குறிப்புகள்
x
தினத்தந்தி 13 Aug 2023 1:30 AM GMT (Updated: 13 Aug 2023 1:30 AM GMT)

மழைக்கால பயணத்தின்போது தலையில் அதிக அளவு எண்ணெய் பூசுவதை தவிர்க்க வேண்டும். மழையில் நனைய நேரிட்டால், தலைமுடி உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதே இதற்கு காரணம். இதனால் காய்ச்சல், சளி, தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

ல்வேறு வேலைகள் காரணமாக தற்போது பெண்களும் அதிக அளவில் பயணம் மேற் கொள்கிறார்கள். இந்த பயணங்களின்போது, அவர்களின் பாதுகாப்புக்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். குறிப்பாக பருவகால சூழ்நிலையை மனதில் கொண்டு, அதற்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பருவமழை காலங்களில் பயணம் செய்யும் பெண்கள், எத்தகைய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

மழைக்கால பயணங்களின்போது குடை, ரெயின்கோட், ஜெர்கின் ஆகியவற்றோடு கூடுதலாக ஒரு செட் உடையையும் உடன் எடுத்துச் செல்வது நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நீங்கள் அணிந்திருக்கும் உடை ஈரமாகிவிட்டால் உடனே அந்த மாற்று உடையை அணிந்துக்கொள்ளலாம்.

மழைக்காலத்தில் மிகவும் லேசான துணிகளையும், வெளிர் நிற ஆடைகளையும், உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் வெயில் அதிகமாக இருக்காது என்பதால், சன்ஸ்கிரீன் பூசுவதைத் தவிர்க்கக் கூடாது. தண்ணீர் பட்டாலும் அழியாத வகையில் இருக்கும் வாட்டர் புரூப் மேக்கப் பொருட்களை உபயோகிப்பது நல்லது.

மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிக ஈரப்பதம் காரணமாக, சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரிக்கும். இதனால் முகப்பரு பிரச்சினை வரக்கூடும். எனவே மழைக்கால பயணத்தின்போது பேஸ் டிஸ்யூக்களை உடன் வைத்துக்கொள்வது நல்லது.

மாதவிடாய் நாட்களின்போது பயணம் மேற்கொள்ளும் பெண்கள், மழைக்காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சானிட்டரி நாப்கின்களை வைத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் வலிகளைக் குறைக்கக்கூடிய ஹாட் வாட்டர் பேக்கையும் உடன் எடுத்துச்செல்வது நல்லது.

மழைக்கால பயணத்தின்போது தலையில் அதிக அளவு எண்ணெய் பூசுவதை தவிர்க்க வேண்டும். மழையில் நனைய நேரிட்டால், தலைமுடி உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதே இதற்கு காரணம். இதனால் காய்ச்சல், சளி, தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மழைநீரில் நடக்கும்போது வழுக்காமல் இருக்கும் வகையிலான காலணிகளை அணிய வேண்டும். ஹீல்ஸ் போன்ற காலணிகளைத் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் பெரும்பாலும் வெளி இடங்களில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது.


Next Story