பச்சை மிளகாய் 'அல்வா'


பச்சை மிளகாய் அல்வா
x
தினத்தந்தி 10 July 2022 1:30 AM GMT (Updated: 10 July 2022 1:30 AM GMT)

காரத்தன்மையுள்ள பச்சைமிளகாயைக் கொண்டு, இனிப்பு செய்து ருசித்திருக்கிறீர்களா?

றுசுவைகளில் ஒன்றான 'காரம்' என்றாலே, நம் நினைவிற்கு வருவது பச்சை மிளகாய்தான். உணவு பதார்த்தங்களில் வாசனையையும், காரச் சுவையையும் அதிகரிக்க பச்சை மிளகாய் பயன்படுகிறது. இதை ஊறுகாய், குழம்பு, வற்றல் என பலவிதங்களில் தயாரிக்கலாம் என்பது அனைவரும் அறிந்தது.

காரத்தன்மையுள்ள பச்சைமிளகாயைக் கொண்டு, இனிப்பு செய்து ருசித்திருக்கிறீர்களா? ஆம், வித்தியாசமான முறையில், பச்சை மிளகாயில் சுவையான 'அல்வா' செய்வது எவ்வாறு என்று இங்கு பார்ப்போம்...

தேவையானப் பொருட்கள்:

பச்சை மிளகாய் - 1 கப்

சர்க்கரை - ¼ கப்

முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு

சோள மாவு - 1 டீஸ்பூன்

நெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம், திராட்சையை போட்டு வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.

பச்சை மிளகாயை விதைகள் நீக்கி, நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை மிளகாயைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் தண்ணீரில் இருக்கும் பச்சை மிளகாயை எடுத்து இதில் போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதுபோல் 3 முறை செய்யவும். இதன் மூலம், மிளகாயில் உள்ள காரத்தன்மை குறையும். சூடு ஆறியதும், மிளகாயை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, சூடானதும் அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு நன்றாக வதக்கவும். மிளகாயின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து, பச்சை மிளகாய் கலவையில் ஊற்றி, தொடர்ந்து கிளற வேண்டும். இந்தக் கலவை நன்றாக சுருண்டு, ஓரங்களில் நெய் பிரிந்து வரும் சமயத்தில், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து இறக்கி விட வேண்டும். இந்த அல்வா, இனிப்பு, காரச் சுவை கலந்து வித்தியாசமாக இருக்கும்.


Next Story