உப்பு அழகை அதிகரிக்குமா?


உப்பு அழகை அதிகரிக்குமா?
x
தினத்தந்தி 18 Jun 2023 1:30 AM GMT (Updated: 18 Jun 2023 1:30 AM GMT)

உப்பு, சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை எளிதாக நீக்கும். சருமத் துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி அவற்றை சுத்தம் செய்யும். சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்கும்.

ணவின் சுவையை அதிகரிக்கும் உப்பு, அழகை மேம்படுத்தவும் உதவும். சமையல் அறையில் மட்டுமில்லாமல், குளியல் அறையிலும் உப்பை பயன்படுத்தலாம். இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் உப்பில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் உள்ளன. இவை அழற்சியை நீக்கி சருமத்தை மிருதுவாக்கும். பொலிவை அதிகரிக்கும்.

உப்பு, சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை எளிதாக நீக்கும். சருமத் துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி அவற்றை சுத்தம் செய்யும். சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்கும். இதில் உள்ள நுண்கிருமிகள் எதிர்ப்பு பண்பு, முகப்பரு போன்ற சரும பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். இதை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம்.

உப்பைக் கொண்டு சரும அழகை பராமரிக்கும் வழிகள் இங்கே…

ஸ்கிரப்:

ஆலிவ் எண்ணெய் - ¼ டீஸ்பூன், உப்பு - ¼ டீஸ்பூன் இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து குளிப்பதற்கு முன்பு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தவும். இதன்மூலம் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி பொலிவு அதிகரிக்கும்.

பேஸ் மாஸ்க்:

உப்பு - 2 டீஸ்பூன், தேன் - 4 டீஸ்பூன், இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இதன் மூலம் சருமத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி கட்டுப்படும். சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாறும்.

கருவளையம் நீங்க:

தூக்கமின்மை மற்றும் பல காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும். அதனைப் போக்க ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய், ½ டீஸ்பூன் மஞ்சள் தூள், ¼ டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை கலந்து கண்களைச் சுற்றி பூசி மென்மையாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கி பொலிவு பெறும்.

உப்பு குளியல்:

உப்பின் மூலக்கூறுகள் சருமத் துளைகளுக்குள் ஊடுருவி அழுக்கு மற்றும் நச்சுப் பொருட்களை நீக்கும். சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும். சருமத்தில் ஈரப்பதத்தையும் தக்க வைக்கும். வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில், மூன்றில் ஒரு பங்கு எப்சம் உப்பைப் போட்டு நன்றாகக் கரைக்கவும். பின்பு அதில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை உடல் மூழ்கி இருக்குமாறு படுத்து, பின்பு சுத்தமான தண்ணீரில் குளிக்கவும்.

பொடுகுக்கு தீர்வு:

தலையில் இருக்கும் பொடுகை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உப்பு உதவும். தலையில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சி பூஞ்சை தாக்குதலையும் தடுக்கும். தலைமுடியை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். பின்பு 2 டீஸ்பூன் உப்பை சிறிது சிறிதாக தலையில் தூவவும். பிறகு ஈரமான விரல்களைக் கொண்டு வட்ட இயக்கத்தில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.


Next Story