யூடியூப் சேனலில் பகிரப்படும் தகவல்களை பின்பற்றுவது சரியா?


யூடியூப் சேனலில் பகிரப்படும் தகவல்களை பின்பற்றுவது சரியா?
x
தினத்தந்தி 5 March 2023 1:30 AM GMT (Updated: 5 March 2023 1:31 AM GMT)

யூடியூப் சேனல்களில் வலம் வரும் மருத்துவக் குறிப்புகளை, தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்பே பின்பற்ற வேண்டும். முறையான ஆலோசனை இல்லாமல், எந்த மருந்தையும் நீங்களாக மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடக் கூடாது.

மூக ஊடகங்களில் மக்களின் வரவேற்பை பெற்று வேகமாக வளர்ந்து வருவது யூடியூப். உணவு, உளவியல், நிதி மேலாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு, கலாசாரம், பயணம் என அனைத்தையும் இருக்கும் இடத்தில் இருந்தே யூடியூப் சேனல் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு யூடியூப் சேனல்களில் பகிரப்படும் தகவல்களை முழுமையாக நம்பி அவற்றை பின்பற்றுவது சரியா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது.

யூடியூப் சேனல்களில் பகிரப்படும் விஷயங்கள் முழுவதுமே தவறானவை என்று கூற முடியாது. அவற்றில் எது உண்மை? எது பொய்? என்பதை பொறுமையாக விசாரித்து அறிந்த பிறகு தான் செயல்படுத்த வேண்டும்.

குறிப்பாக யூடியூப் சேனல்களில் வலம் வரும் மருத்துவக் குறிப்புகளை, தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்பே பின்பற்ற வேண்டும். முறையான ஆலோசனை இல்லாமல், எந்த மருந்தையும் நீங்களாக மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடக் கூடாது. இதனால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படலாம்.

யூடியூப்பில் ஒரு செய்தியை பார்த்த உடனேயே, அதனை மற்றவர்களுக்கு பகிரக் கூடாது. அதன் உண்மைத் தன்மையை தெளிவாக அறிந்த பிறகே பகிர வேண்டும். உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவை நன்றாகப் பயிற்சி பெற்றவர்களால் செய்து காட்டப்படும்போது, அதனை வரவேற்கலாம். அதேசமயம், அவற்றை பயிற்சி செய்வதற்கு முன்பு, அந்த துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பெண்களுக்கு உதவும் வகையிலான சமையல், குழந்தை வளர்ப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு தொடர்பான ஆலோசனைகள் பல யூடியூப் சேனல்களில் வழங்கப்படுகின்றன. அவற்றால் பலர் பயன்பெறுகிறார்கள். அதேநேரத்தில், அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய்ந்த பிறகே பின்பற்ற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

எந்த ஒரு யூடியூப் சேனலின் தகவல்களைப் பற்றியும் உறவினர்கள், நண்பர்கள் அல்லது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நபரிடம் கலந்தாலோசித்த பிறகு அதை பின்பற்றலாம். சினிமாவிற்கு 'சென்சார்' என்ற கட்டுப்பாடு இருப்பது போல், யூடியூப் சேனல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு என்பது தனியாக இல்லை. ஆகையால், உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் பார்க்கும் யூடியூப் சேனல்களை நீங்களே மேற்பார்வையிட வேண்டும்.

வாழ்வில் எதிலும், எங்கும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவதே பாதுகாப்பை உறுதிபடுத்தும்.


Next Story